ஜனநாயகக் கொள்கையை மீறினால் சர்வதேசம் புறக்கணிக்கும் என்பதை அரசு விளங்கிக்கொள்ள வேண்டும்!

“ஜனநாயகக் கொள்கைக்கு முரணாகச் செயற்படும் நாட்டை சர்வதேசம் புறக்கணிக்கும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு இனியாவது விளங்கிக்கொள்ள வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பௌத்த மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் இனவாதச் செயற்பாடுகளை அரசு தொடருமாயின் பாரிய விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் ஆட்சி முறைமையை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை ஒரு நாட்டை அங்கீகரிக்கும். அந்தவகையில் இலங்கை ஜனநாயக நாடு என்ற நிலைப்பாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாடு ஜனநாயகக் கொள்கைக்கு முரணாகச் செயற்படும்போது சர்வதேசம் கேள்வி எழுப்பும். இதற்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியில் உள்ள அரசின் பொறுப்பாகும்.

இவ்விடயத்தில் இறையாண்மை என்பதைக் கூறி சர்வதேசத்தை வெறுக்க முடியாது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பல விடயங்களை உணர்த்தியுள்ளது.

2009 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து இலங்கை விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது .

இலங்கைக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து செயற்பட்ட நாடுகள் இம்முறையும் இலங்கைக்கு எதிராகவே செயற்பட்டுள்ளன.

ஆனால், கடந்த வருடம் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட நாடுகள் இம்முறை இலங்கை விவகாரத்தில் அமைதி காத்துள்ளமை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் குறித்து முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இறுதிப்போரில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை.

மாறாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகள் குறித்து அதிகளவு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் மீது அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட மனித அடக்குமுறை தொடர்பில் ஐ.நா.மனித உரிமைகள் சபையில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது ஜனாஸாக்கள் பலவந்தமான முறையில் தகனம் செய்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இலக்காகக்கொண்டு தொல்பொருள் அகழ்வராய்ச்சி, தமிழ் சமூகத்தினர் மீது வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ஆகியவற்றை பிரதானமாக குறிப்பிட வேண்டும்.

ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படும் நாட்டை சர்வதேசம் புறக்கணிக்கும் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு இனியாவது விளங்கிக்கொள்ள வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்குடன் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மீது தொடரும் அடக்குமுறைகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

தனி சிங்கள மக்களின் ஆட்சியை அமைத்துள்ளோம் என்று பெருமிதம் கொள்ளும் அரசை சிங்கள – பௌத்த மக்களே இனிப் புறக்கணிப்பார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.