சீன – இலங்கை தலைவர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்.

சீன – இலங்கை தலைவர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல் அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்.

➢ துறைமுக நகர் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்….

➢ சர்வதேச விடயங்களில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு….

➢ சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு மீண்டும் ஜனாதிபதிக்கு அழைப்பு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் அவர்களுக்குமிடையில் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போது அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்காக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்திகளுக்கு தொடர்ந்தும் உதவுவதாகவும் சர்வதேச அரங்கில் இலங்கை முகங்கொடுக்க நேர்கின்ற நியாயமற்ற அழுத்தங்களின் முன்னிலையில் தொடர்ந்தும் உறுதியாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து சீனாவின் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி அவர்கள், அண்மையில் நிறைவடைந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 46வது நிகழ்வில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக ஷீ ஜின் பின் ஜனாதிபதிக்கும் சீன அரசாங்கத்திற்கும் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். 6 இலட்சம் கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியதற்காகவும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்த சீன ஜனாதிபதி அவர்கள், கொவிட் 19 பாரிய சவாலாக அமைந்தாலும்கூட சீன- இலங்கை தொடர்புகளை புது பரிமாணத்துடன் மேம்படுத்துவதற்கு காரணமாகியதென்றும் குறிப்பிட்டார்.

“கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பன இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யக்கூடிய பாரிய இரண்டு திட்டங்களாகும். அவற்றை உடனடியாக நிறைவு செய்வது எமது எதிர்பார்ப்பாகும். துறைமுக நகரம், வெளிநாட்டு முதலீடுகளை அதிகப்படுத்தக் கூடியதாகவும் தொழிலின்மைக்கு ஒரு தீர்வாகவும் அமைந்துள்ளது” என்று சீன ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்யுமாறும் சீன அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

எஞ்சிய தனது நான்கு வருட பதவிக்காலத்தில் இலங்கையின் சுபீட்சத்திற்காகவும் அபிவிருத்திக்காகவும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை செயற்படுத்துவது தனது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், “வறுமையை ஒழிப்பது தனது பிரதான நோக்கமாகும். அதற்காக எமக்கு சீனாவை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்” என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக உதவி செய்ய தமது விருப்பத்தை தெரிவித்த சீன ஜனாதிபதி அவர்கள், கடந்த பல வருடங்களில் தனது நாட்டில் 90 இலட்சம் பேரை வறுமை நிலையில் இருந்து மீட்டெடுக்க முடியுமாக இருந்ததென்றும் குறிப்பிட்டார்.

தாம் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்ததை நினைவுகூர்ந்த ஷீ ஜின் பின் அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விரைவில் தமது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதை தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கொவிட் நோய் பரவலின் காரணமாக திட்டமிட்டபடி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள முடியாது போனதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இரு தரப்பினருக்கும் இயலுமான சந்தர்ப்பத்தில் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

சீனா – இலங்கை தொடர்புகளை உபாய ரீதியாக நன்மை பயக்கக்கூடிய வகையில் மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தை தெளிவுபடுத்திய சீன ஜனாதிபதி அவர்கள், இருநாட்டு மக்களுக்கிடையிலும் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

சீனா மக்கள் வங்கியினால் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கிய பரிமாற்று நிதி வசதிகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அது இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு பங்களிப்பு செய்யும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை சீன நட்பின் அடையாளமாக ஹம்பாந்தோட்டை தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை ஸ்தாபிப்பதற்கு சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சீன கம்னியுஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Leave A Reply

Your email address will not be published.