மசூர் மௌலானா வீதி குறுக்குத் தெருக்களுக்கு பளீல் , ஹஸன் ஆகியோரின் பெயர்களை சூட்டத் தீர்மானம்.

மருதமுனை மசூர் மௌலானா வீதியின் இரண்டு குறுக்குத் தெருக்களுக்கு மர்ஹூம் பளீல் மௌலானா மற்றும் மர்ஹூம் ஹஸன் மௌலவி ஆகியோரின் பெயர்களை சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் 36ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது இதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகர முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட இப்பிரேரணையை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி ஆமோதித்து உரையாற்றினார். அத்துடன் மாநகர சபை உறுப்பினர்களான .ஏ.ஆர்.அமீர், சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர், பி.எம்.ஷிபான் ஆகியோரும் பிரேரணையை வரவேற்று, இப்பிரமுகர்களின் கல்வி, கலாசார, சமூகப் பணிகள் மற்றும் ஆளுமையான செயற்பாடுகளைப் போற்றியும் உரையாற்றினர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிக்கையில்;
மருதமுனைப் பிரதேசத்தின் பழம்பெரும் கல்விமானாகத் திகழ்ந்த மர்ஹூம் ஐ.எம்.எம்.எஸ்.பளீல் மௌலானா ஆசிரியராக, அதிபராக மற்றும் கல்வி அதிகாரியாக கடமையாற்றி, கல்முனைப் பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் சமூக, கலாசார முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.

மக்களின் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெற்று, சமூகத்தில் ஒரு கீர்த்திமிக்க மாமனிதராக இருந்து சேவையாற்றி மறைந்த பளீல் மௌலானாவின் பணிகளை நினைவுகூர்ந்து, அவர் வாழ்ந்து மறைந்த மருதமுனை மசூர் மௌலானா வீதியின் வடக்காக செல்லும் 04ஆம் குறுக்குத் தெருவுக்கு பளீல் மௌலானா லேன் என்று பெயர் சூட்டுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அவ்வாறே ஒரு மார்க்க அறிஞராகவும் சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் சமாதான ஆர்வலராகவும் திகழ்ந்த மர்ஹூம் மௌலவி ஹஸன் ஷர்க்கி அவர்கள், கல்முனைப் பிராந்தியத்தில் போர்ச்சூழல் காலப்பகுதியில் இனங்களிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளையும் குடும்பங்கள் மத்தியில் ஏற்படுகின்ற பிணக்குகளையும் தீர்த்து வைப்பதில் முன்னின்று உழைத்துள்ளார். என்னைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று, மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காட்டுப்பகுதியில் தடுத்து வைத்தபோது, அங்கு வந்து புலிகளுடன் பேசி, என்னை விடுவித்து வருவதில் ஹஸன் மௌலவி முக்கிய பங்காற்றியிருந்தார்.

சமூகத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் இப்பெரியார் ஆற்றியிருக்கின்ற சேவைகளை நினைவுகூர்ந்து மருதமுனை மசூர் மௌலானா வீதியில் இருந்து தெற்காகச் செல்லும் 04ஆம் குறுக்குத் தெருவுக்கு ஹஸன் ஷர்க்கி லேன் என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானிக்கப்படுகிறது- என முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டார்.

உறுப்பினர்களின் கருத்துகளைத் தொடர்ந்து இவ்விரு வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை, மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலியின் முன்மொழிவுக்கமைவாக மருதமுனை மசூர் மௌலானா வீதியில் இருந்து வடக்காக செல்லும் பனையடி வீதியின் பெயரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் தலைவரான மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் ஞாபகார்த்தமாக லீடர் அஷ்ரப் வீதி என பெயர் மாற்றுவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

Leave A Reply

Your email address will not be published.