இன்று புனித வியாழன்

ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

எல்லையற்ற அன்பால் நம்மை நிரப்பி வாழ்வளிக்கும் நம் இறைவனின் நாமத்தில் புனித வியாழன் நல்வாழ்த்துக்கள்.

பாஸ்கா விழாவின் முப்பெரும் நாள்களின் முதல் நாள் புனித வியாழாகிய இன்று, இயேசுவின் பாஸ்காவை நாம் கொண்டாடுகிறோம்.

இஸ்ராயேல் மக்களோடு சேர்ந்து இங்கு இயேசுவும் தனது பாஸ்காவை கொண்டாடுகின்றார். பாஸ்கா என்றால் கடத்தல் என்று அர்த்தமாகும். எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து கடந்து வந்த இஸ்ராயேலின் பாஸ்கா இன்று புதுவாழ்வைப் பெறுகிறது, புது நம்பிக்கையை, புதுயுக மீட்பைக் கொடுக்கின்றது. இந்தக் கடத்தல் அனுபவத்தில் நாமும் அநீதியிலிருந்து, அடிமைத்தனத்திலிருந்து, அதிகார அழுத்தத்திலிருந்து கடக்க வேண்டும். சுய நலத்தைக் கடந்து சுதந்திர உரிமை பெறவேண்டும் – நமது எண்ணில்லா துன்பத்திலிருந்து கடந்து புது மகிழ்வுக்கு வருவோம்.

இன்று இயேசு தமது குருத்துவத்தை ஏற்படுத்தி நம்மோடு வாழும் தொடர் பாஸ்காவை கொடுக்கிறார். என்றும் நாம் இயேசுவோடு வாழவும் தொடர்ந்து இயேசுவின் இந்த பாஸ்காவில் தீமைகளை கடந்து நன்மைகளை செய்யவும், நல்லதை செய்யவும் இயேசு நமக்கு பொது குருத்துவத்தில் பங்கு கொடுக்கிறார்.

மாபெரும் குருத்துவத்தின் தொடர் நிகழ்வாக தொடர் பிரசன்னமாக இயேசு நற்கருணையை கொடுக்கிறார். தனது உடலைப் பிட்டு, பகிர்ந்து கொடுக்கிறார், என்று நாம் நம்மையே உடைத்து மற்றவர்க்கு கொடுக்கிறோமோ அன்றுதான் இயேசுவின் உடலில் நாம் பங்கடைகிறோம். நற்கருணை நமக்கு குறித்துக்காட்டும் ஒற்றுமை, சமத்துவம், சதோரத்துவம் நமக்குள்ளே இருக்கவும் நம்மையே பிறருக்கு பகிர்ந்து கொடுக்கவும் இயேசு தன் உடலையே நற்கருணையாக கொடுக்கிறார். இந்தப் புனித நாளில் நம் வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்து பாஸ்காவின் உட்பொருளான தீமையிலிருந்து நன்மைக்கும், இருளிலிருந்த ஒளிக்கும், சாவிலிருந்து வாழ்வுக்கும் கடந்து செல்லும் வாழ்வுக்காய் நம்மை அர்ப்பணித்தவர்களாய் – நற்கருணை வாழ்வான பிறருக்கு கைகொடுக்கும் உள்ளத்தைக் கேட்டு இயேசுவில் உறைவோம், அவரில் நிறைவடைவோம். அதற்காய் இறைவனிடம் அருள்வரம் கேட்போம்.

இறைமகன் தன்னையே தாழ்த்தி சீடர்களின் பாதங்களை கழுவினார்.இவ்வுலக வாழ்வில் நாமும் தாழ்ச்சியும் பணிவுள்ள உள்ளவர்களாக வாழ இறைமகன் நமக்கு வழிகாட்டியுள்ளார்.அந்த வழியில் நாமும் பயணிப்பதற்கு இந்த புனித நாளில் உறுதி பூணுவோம்.

– RK

Leave A Reply

Your email address will not be published.