ஆயர் ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் திங்கள் தமிழ்த் தேசிய துக்க தினம்

ஆயர் ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் திங்கள் தமிழ்த் தேசிய துக்க தினம்
வடக்கு – கிழக்கு தமிழ் சிவில் சமூகம் பிரகடனம்

“மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ்த் தேசியத்துக்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாகப் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம். இதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டும், உங்கள் உடைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு வடக்கு – கிழக்கு தமிழ் சிவில் சமூகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், வடக்கு, – கிழக்கு சிவில் சமூக சம்மேளனம், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, பல்சமயங்களின் ஒன்றியம் மட்டக்களப்பு, முதியோர் சம்மேளனம் – மட்டக்களப்பு, வெண்மயில் அமைப்பு – மட்டக்களப்பு, அமெரிக்கன் மிஷன் – மட்டக்களப்பு, சடோ லங்கா நிறுவனம் – மட்டக்களப்பு, அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம், தமிழர் நலன் காப்பகம் – மட்டக்களப்பு, சிவகுரு ஆதீனம் – யாழ்ப்பாணம், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு – மட்டக்களப்பு, புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு – திருகோணமலை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, உலகத் தமிழர் மாணவர் ஒன்றியம், இராவண சேனை – திருகோணமலை, வடக்கு – கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் ஆகியன ஒன்றிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் வண. பிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்துக்கு அளவிட முடியாத ஒரு பேரிழப்பாகும். அவரின் இழப்பால் தமிழ்த் தேசியம் ஒரு சிறந்த தலைவனை இழந்து நிற்கின்றது. தமிழரின் உரிமைக்காக மதங்களை கடந்து தேசியத்தின் பால் ஓங்கி ஒலித்த குரலை தமிழர் தேசம் இன்று இழந்து நிற்கின்றது.

2009ஆம் ஆண்டு போர் மெளனிக்கப்பட்ட பின் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரம் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவரே இராயப்பு ஜோசப் ஆண்டகை.

தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதிப் போரில் கொல்லப்பட்டபொது மக்களின் எண்ணிக்கையைபல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும்அறுதியிட்டு தெரிவித்தவர்.

பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதி குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளுமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.

ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ்த் தேசியத்துக்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாகவும், எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம்.

இதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்குவதுடன், திங்கட்கிழமை அனைவரும் தங்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும், வணிக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டும், உங்கள் உடைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் துக்கத்தை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப் பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.