நான் தமிழருக்கு எதிரானவன் அல்லன்; மாகாண சபை முறைமைக்கே எதிர்ப்பு! : அமைச்சர் வீரசேகர

நான் தமிழருக்கு எதிரானவன் அல்லன்;
மாகாண சபை முறைமைக்கே எதிர்ப்பு!

– வடமராட்சி கிழக்கில் அமைச்சர் வீரசேகர

“நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். ஆனால், மாகாண சபை முறைமையை எதிர்க்கின்றேன்.”

– இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்தபின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்காக நான் வந்துள்ளேன். மல்லாவி மற்றும் மருதங்கேணிப் பகுதிகளில் பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக இரண்டு பொலிஸ் நிலையங்களைத் திறந்து வைத்துள்ளேன்.

தற்போது நாடு பூராகவும் 494 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக இன்னும் 190 பொலிஸ் நிலையங்களைப் புதிதாக அமைக்கவுள்ளோம்.

அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் வடபகுதியில் இரண்டு புதிய பொலிஸ் நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பொதுமக்கள் தூர இடங்களுக்குச் சென்று தமது பொலிஸ் சேவையைப் பெற்றுக்கொள்வதை நிறுத்த இதனைச் செய்துள்ளோம்.

நான் பொதுமக்களுடன் உரையாடும்போது பொதுமக்கள் இந்தப் பிரச்சினையை என்னிடம் கூறினார்கள். அதற்கு ஒரு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கே வேலையில்லாப் பிரச்சினைதான் இந்த மணல் கடத்தலுக்குக் காரணமாக இருக்கின்றது. எனவே, கல்வி கற்று வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் மற்றும் கல்வியை இடையில் நிறுத்தி வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்து நிறுத்த முடியும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து இந்தப் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு நான் யோசித்துள்ளேன்.

இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த முடியும். எனினும், சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

புங்குடுதீவிலும் வெகுவிரைவில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இன்று ஆரம்பித்து இருக்கின்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைக்கப்படும்.

மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன். அன்றும் எதிர்த்தேன்; இன்றும் எதிர்க்கின்றேன். நாளையும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளேன்.

மாகாண சபை முறைமை இந்தியாவால் எமக்குப் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்று. மாகாண சபை முறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும். ஒன்பது மாகாண சபைகள் காணப்படும்போது அவற்றுக்குத் தனியான நிர்வாகம் காணப்படும். மத்திய அரசு தனியாகச் செயற்பட வேண்டி வரும். ஆனால், மத்திய அரசு என்பது ஒன்றுதான். ஒன்பது மாகாண சபைகளுக்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது.

ஆனால், இந்த அரசு மாகாண சபை முறைமை வேண்டும் எனத் தீர்மானிக்குமானால் அந்தத் தீர்மானத்தை நான் எதிர்க்கப் போவதில்லை. வடக்கில் மாகாண சபை இல்லாது போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த முறை வடக்கு மாகாண சபையில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்திய அரசால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியைப் பயன்படுத்தாது திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது.

ஆகவே, மாகாண சபை என்பது மக்களுக்குப் பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும்.

எனினும், வடக்கு மக்கள் மாகாண சபையை விரும்புகின்றார்கள். அது அரசியல் காரணமாக இருக்கலாம். ஆனால், சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாண சபை முறைமைக்கு எதிரானவன்.

எனினும், அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தீர்மானித்தால் அரசின் தீர்மானத்துக்கு ஏற்றவாறு நான் செயற்படத் தயாராக உள்ளேன். நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம். ஆனால், தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபை முறைமைக்கு எதிரானவன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.