யாழ். தென்மராட்சியில் 30 பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயம்!

யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாய நிலையில் உள்ளன என்று சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் யோ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்பப் பாடசாலைகளில் இணையும் மாணவர் தொகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மீசாலை கிழக்கில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இவ்வருடம் முதலாம் தரத்துக்கு ஒரு மாணவர்கூட அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை. இது எதிர்காலத்தில் கல்வித்துறையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

தற்சமயம் நாட்டில் 200 பிள்ளைகளுக்கும் குறைவாகக் காணப்படும் பாடசாலைகளை மூடுவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகின்றது எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 54 பாடசாலைகளே தற்சமயம் இயங்கி வருகின்றன. 6 பாடசாலைகள் சில பல காரணங்களால் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன.

பொறுப்பு வாய்ந்த கல்வி அதிகாரி ஒருவரின் தகவலின்படி தென்மராட்சியில் 30 பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி பயில்கின்றார்கள்.

கல்வி அமைச்சின் யோசனை நடைமுறைக்கு வருமானால் தென்மராட்சிப் பிரதேசத்தில் மாத்திரம் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்.

ஒரு பாடசாலையை தீர்மானம் நிறைவேற்றி மூடுவது சுலபம். ஆனால், அதே பாடசாலையை ஆரம்பிப்பது மிகமிகக் கடினமான செயற்பாடு.

அத்துடன் தென்மராட்சியில் குறைந்த மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் சிலவற்றை அருகில் இருக்கும் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதனை நாம் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.