விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை! – சாகர காரியவசம் தெரிவிப்பு.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி நிலையையும் நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகி வருகின்றது.

விஜயதாஸ ராஜபக்சவின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவரின் நோக்கமாக உள்ளது.

அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் ஜனாதிபதியையும் அரசையும் பழிவாங்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

தனது உயிருக்கு ஜனாதிபதி கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்று அவர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்” – என்றார்.

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட புதிய சட்டமூலத்துக்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சக்களின் செயற்பாடுகளையும் அவர் விமர்சித்திருந்தார். ஜனாதிபதி தொலைபேசியில் தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விஜயதாஸவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் நேற்று அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.