மேலும் 260 கைதிகளுக்குக் கொரோனா; இரு வாரங்களுக்குப் பார்வையிடத் தடை.

“சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மேலும் 260 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புதிதாக சிறை வைக்கப்படும் கைதிகளிலேயே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் சிறைச்சாலைகளில் 260 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில் கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்வையிட வரும்போது கைதிகள் ஒன்றுகூடுவதால் வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதால், இரு வாரங்களுக்குக் கைதிகளைப் பார்வையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக சிறைவைக்கப்படும் கைதிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுகின்றனர்.

தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் சிகிச்சைக்காகக் கந்தக்காடு சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்ததுடன், உரிய சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

ஏற்கனவே சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்த மட்டத்திலேயே இருக்கின்றது.

இதேவேளை, கட்டாயம் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய கைதிகள் மாத்திரமே நீதிமன்ற விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ஏனையவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்று வருகின்றன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.