இலங்கையில் தீவிரமடையும் புதிய கொரோனா வைரஸ்! 2 மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்!

இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வரும் புதிய வைரஸ் குறித்த உறுதியான ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுமாறு பொதுமக்களுக்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்திர அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தியாவில் பரவல் அடைந்துவரும் கொரோனா வைரஸின் மாறுபாடு இலங்கையில் பரவி வருகின்றது என்பதற்கு இதுவரை எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லை. இந்தப் புதிய வைரஸ் குறித்து முழு மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின் அடுத்த வாரம் சரியாகக் கூற முடியும்.

இந்தியாவில் பரவல் அடைந்துவரும் வைரஸ் இலங்கைக்குள் பரவ வாய்ப்புள்ள போதிலும் இதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்க சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

இதேநேரம் இந்த வைரஸ் நாட்டில் ஏற்கனவே பரவி வரும் வைரஸின் புதிய மாறுபாடாக கூட இருக்கலாம் என பரிசோதனைகள் காட்டுகின்றன.

பண்டிகைக் காலத்துக்குப் பிறகு கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டி பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கொரோனாத் தொற்று மாதிரிகளில் இது போன்ற பிறழ்வை அவதானிக்க முடிந்தது.

எவ்வாறாயினும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் புதிய வைரஸ் நாட்டில் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.