மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழப்பு.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சண்டையின்போது பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் பர்கினோ பாசோவில் உள்ள ஷலீல் மாகாணம் யாடகூ கிராமத்திற்குள் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் அங்கிருந்த கிராமமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பாதுகாப்பு படையினர் வருவதற்கு முன்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அந்த கிராமத்தை விட்டு தப்பிச்சென்றுவிட்டார்.

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கிராம மக்கள் பலர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.