கொடிகாமம் சந்தைக் கொத்தணியில் 4 நாட்களில் 42 பேர் அடையாளம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகிய இரண்டு ஆய்வுகூடங்களில் 749 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 43 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 பேரும், கிளிநொச்சியில் 4 பேரும், வவுனியாவில் 9 பேருமாக 43 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் சந்தைத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்குத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் 42 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்கள் மூவருக்கும், கொடிகாமத்தில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தருக்கும், வங்கி ஊழியருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கைதடியில் உள்ள அரச செயலகம் ஒன்றின் ஊழியர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நோயாளிகள் இருவருக்கும், கோப்பாய் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வந்த இருவருக்கும், அச்சுவேலி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த இருவருக்கும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்ற 4 பேருக்கும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நால்வருக்கும், வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஐவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரும் பல்கலைக்கழக மாணவனும் அடங்குகின்றனர்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சேர்க்கப்பட்ட மூவருக்கும், தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.