முல்லைத்தீவில் மாபெரும் கொத்தணி : வைத்தியசாலை செல்லவும் இராணுவத்தால் அனுமதி மறுப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளமையால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகளுக்குக்கூட வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது. வைத்தியசாலைக்குச் செல்வதற்காக வீதிக்கு வரும் பொதுமக்களைப் படையினர் திருப்பி அனுப்புகின்றனர் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கொத்தணி உருவாகியுள்ளது. இதையடுத்து புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு ஆகிய மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஆடைத்தொழிற்சாலையால் பலருக்கு தொற்றுப் பரவியிருக்கலாம் என்ற அச்சம் சுகாதாரத் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தவர்கள் பலர் தொற்றுக்கு உள்ளாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று கூறப்படுகின்றது.

அவ்வாறான குடும்ப உறுப்பினர்களும் இந்த முடக்கப்பட்ட பகுதிகளுக்குள் இருப்பதால், தொற்று அறிகுறி தென்பட்டாலும் வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

வைத்தியசாலைக்குச் செல்வதற்கு வீதிகளுக்கு வந்தால் கடமையிலுள்ள இராணுவத்தினர் அவர்களைத் திருப்பி அனுப்புகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.