கொழும்புத் துறைமுக நகர் ராஜபக்சக்களின் சொத்தல்ல! – சீனாவுக்கு அடகு வைக்க வேண்டாம் என இம்ரான் மஹ்ரூப் எம்.பி.

“கொழும்புத் துறைமுக நகர், ராஜபக்ச குடும்பத்தின் சொத்தல்ல. இது இந்த நாட்டு மக்களின் சொத்து.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் தற்போது கொரோனாத் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. நாளொன்றுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்களும், அண்ணளவாக முப்பது மரணங்களும் பதிவாகின்ற சந்தர்ப்பத்தில் அரசு அவசர அவசரமாக கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றது.

அதனால் கடந்த வாரம் முடக்கப்பட்ட நாட்டை இந்த வாரம் திறந்து மீண்டும் முடக்கவுள்ளனர்.

தேசிய சொத்துக்களைப் பாதுகாப்போம் எனக் கூறி 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ராஜபக்ச அரசு, இந்தச் சட்டமூலம் ஊடாக கொழும்புத் துறைமுக நகரத்தை சீனாவுக்கு அடகு வைக்க முயற்சிக்கின்றது.

அவர்கள் நினைத்தது போல் இதை வழங்க துறைமுக நகர் ராஜபக்ச குடும்பத்தின் சொத்தல்ல. இது இந்த நாட்டு மக்களின் சொத்து.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இந்த நகரின் பயனை எமது பிள்ளைகள் மட்டுமல்ல அவர்களின் பிள்ளைகளும் அனுபவிக்க முடியாது.

ஐக்கிய மக்கள் சக்தியாக நாம் துறைமுக நகரத்துக்கு எதிர்ப்பல்ல. அந்த அபிவிருத்தியை நாங்கள் விரும்புகின்றோம். ஆனால், இந்தச் சட்டமூலத்தில் சில சரத்துக்களுக்கே நாங்கள் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.