மக்களின் உயிர்களைக் காப்பாற்ற நாட்டை முழுமையாக முடக்குங்கள் அரசிடம் ரணில் அவசர வேண்டுகோள்.

“கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது. எனவே, நாட்டை அரசு முழுமையாக உடன் முடக்க வேண்டும்.”

இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முன்னர் நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் எனவும் (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நாட்டில் ஒவ்வொரு பகுதிகளாக முடக்குவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை நாம் இப்போது உணர்கின்றோம். எனவே, நாட்டை முழுமையாக முடக்கி, தேவையான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும்.

ஜனாதிபதியும் அமைச்சரவையும் அரசமைப்பால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி கொரோனா நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான திட்டங்களை எடுக்க வேண்டும்.

அரசு தொடர்ந்து நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கினாலும், இந்த ஆண்டில் அதனைச் செய்து முடிக்க இயலாது.

எனவே, நாட்டில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் முதலில் ஈடுபட வேண்டும்.

கடந்த ஆண்டு இலங்கை 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தடுப்பூசி கொள்வனவுக்காகச் செலவிட்டிருந்தால் இன்று தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது.

மத்திய வங்கி பணத்தை அச்சிட்டதாலேயே இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நிய செலாவணியை அதிகரிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட அரசு இந்திய சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அனுமதித்ததால் இந்தக் கொரோனா வைரஸ் மேலும் பரவியது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.