முல்லைத்தீவில் கொரோனாக் கொத்தணி எச்சரிக்கை! – 4 ஆயிரம் பேருக்கு 28ஆம் திகதி பி.சி.ஆர். பரிசோதனை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையால் அந்த மாவட்டத்தில் பெரும் கொரோனாக் கொத்தணி உருவாகும் அபாயம் இருக்கின்றது என எச்சரிக்கப்படுகின்றது. அந்த மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் 28ஆம் திகதி ஒரே நாளில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதற்குரிய ஆளணி வளம் இல்லாமல் முல்லைத்தீவு மாவட்டம் பெரும் இடர்களை எதிர்கொள்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஆடைத்தொழிற்சாலையில் இதுவரை 365 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றியவர்களில் அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரத்து 3 பேரில் 266 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அன்டிஜன் சோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றவர்களுக்குப் பி.சி.ஆர். சோதனை முன்னெடுக்கப்பட வேண்டும். எதிர்வரும் 28ஆம் திகதி அது முன்னெடுக்கத் திட்டமிடப்படுகின்றது.

இதேவேளை, இதுவரை தொற்றாளர்களாகக் கண்டறியப்பட்டவர்கள், அவர்களின் முதல் தொடர்பாளர்கள், குடும்பத்தினர் என்று சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் தொற்றுப் பரவத் தொடங்கியது. ஆனாலும், மே மாதம் 17ஆம் திகதி ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள தத்தமது வீடுகளுக்குச் சென்று வந்துள்ளனர். இதனால் இந்தக் கொத்தணியின் பரம்பல் மிகப் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலேயே அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பங்கள் மற்றும் முதல் தொற்றாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கு உரிய ஆளணி வளம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பெரும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.