தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 686 பேர் சிக்கினர்; 42 ஓட்டோக்கள் பறிமுதல்!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 686 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

முறையாகக் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளைக் கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிப் பயணித்த 42 ஓட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும், அவற்றில் பயணித்த 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, மேல் மாகாணத்தின் எல்லைப் பகுதிகளில் சேதனைச் சாவடிகளில் கடமை புரிந்துவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் நடமாடும் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் சுற்றிவளைப்புப் பிரிவும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் 14 ஆயிரத்து 179 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.