ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் பழைய ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி துவங்கியது.!

இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில் மட்டுமே 7 பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன. இந்த கோயில் ஏறத்தாழ 156 ஏக்கர் பரப்பில் அதாவது சுமார் 6,31,000 சதுர மீட்டர அளவு கொண்டு, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. சேர, சோழ, பாண்டியர்கள், விஜயநகர் அரசர்கள் மற்றும் நாயக்கர்கள் தங்கள் அடுத்தடுத்த ஆட்சி காலங்களில் இந்த கோயிலை விரிவுபடுத்தி அபிவிருத்தி செய்தனர்.

இந்த அற்புத திருத்தலத்திற்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் உள்ளிட்டோர் அரங்கனின் திருவடியை சேர்ந்துள்ளனர். இந்த கோயிலின் 21 கோபுரங்களில் மிக பெரிதான ராஜகோபுரம் 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன் தென்னிந்தியாவிலேயே பெரிய கோயில் கோபுரமாக இருக்கிறது. இந்த பிரமாண்ட ராஜகோபுரத்தை கட்ட சுமார் 1.7 கோடி செங்கற்கள், 20,000 டன் மணல், 1,000 டன் கருங்கல், 12 ஆயிரம் டன் சிமெண்ட், 130 டன் இரும்பு கம்பிகள், 8,000 டன் வர்ண பூச்சுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கோபுரத்தின் மொத்த எடை 1.28 லட்சம் டன்கள். இப்படி பல புகழ் மற்றும் பெருமை வாய்ந்த பக்தி திருத்தலமாக உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் அருங்காட்சியகத்தில் சுமார் 200 முதல் 300 ஆண்டுகள் பழமையானது என்று நிபுணர்கள் நம்பும் பழைய பனை ஓலை பிரதிகள் உள்ளன. இவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக கோயில் அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து ஓலைச்சுவடிகளையும் கேமராவில் ஒளிப்பதிவு செய்து, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு 6 செட் பனை ஓலைகள் வைக்கப்பட்டுள்ளன.

சுந்தரகாண்டம், பாகவதம், ஸ்ரீபாகவதம், பெரியாழ்வார் திருமொழி வியாக்கியானம், துலா காவிரி புராணம் ஆகிய 5 தலைப்புகளில், ஒவ்வொரு தலைப்பிலும் தலா சுமார் 250 ஓலைச்சுவடிகள் 6 கட்டுகளாக இங்கு இருக்கின்றன. இந்த பனை ஓலைச்சுவடிகளில் பெரும்பாலானவை பழந்தமிழ் எழுத்துகளாலும், சில தெலுங்கிலும் எழுதப்பட்டுள்ளன.

இவை மிக பழமையானவை என்பதால், சேதமடைந்து விடாமல் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஓலைகளை டிஜிட்டல் மயமாக்க அவற்றை உயர் தெளிவுத்திறன் கேமராக்கள் (high resolution cameras ) பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஓலைசுவடிகளில் சுந்தரகண்டம் ஸ்ரீ ராமர் மற்றும் அவரது வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. பாகவதம் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றி விவரிக்கிறது. பெரியாழ்வார் திருமொழி வியாக்கியானம் வைணவ நம்பிக்கைகள் பற்றியும், துலா காவிரியானது காவேரியின் மகத்துவத்தை மையமாக கொண்டுள்ளது, குறிப்பாக துலாவின் சூரிய மாதத்தில் காவேரி ஆற்றில் நீராடுவது பற்றியது.

ஓலைகளை டிஜிட்டல் மயமாக்கிய பிறகு ஓலைச்சுவடிகளின் பிரதிகளை டிஜிட்டல் நகலின் பிரிண்ட் அவுட் கொண்டு படிக்கலாம். இது அசல் ஆவணத்தை சேதப்படுத்தாமல் உள்ளடக்கத்தை ஆராய்ச்சி செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும். ஓலைச்சுவடிகள் தமிழிலும், தெலுங்கிலும் இருக்க காரணம் இந்த கோயில் விஜயநகர் ஆட்சியின் கீழும், நாயக்கர் ஆட்சியின் கீழும் இருந்தது தான்.

Leave A Reply

Your email address will not be published.