தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட சுன்னாகத்தில் பெருமளவு மக்கள் பொறுப்புணர்வின்றி நடமாட்டம்

அதிகளவு கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட ஜே-198 கிராமசேவகர் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெருமளவு மக்கள் நடைமுறையில் உள்ள பயணத்தடையையும் மீறி பொறுப்புணர்வற்று நடந்துகொள்கின்றனர் என்று குறித்த பகுதி சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கடத்த இரு தினங்களில் மாத்திரம் 20 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் குறித்த பகுதிகளில் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களைத் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் குறித்த பகுதி சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

எனினும், அந்தப் பகுதிகளில் உள்ள ஒரு சிலர் சுகாதார நடமுறைகளைப் பின்பற்றாமலும், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியும் செயற்படுகின்றார்கள்.

குறித்த பகுதிகளின் உள்வீதிகளூடாக பயணங்களை மேற்கொள்வதுடன் வெளியிடங்களுக்கும் சென்று வருகின்றனர். அதனால் பலருக்கும் தொற்று பரப்பப்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகுகின்றன. ஆகவே, சுகாதாரப் பிரிவினர் விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், உரியமுறையில் குறித்த பகுதி மக்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.