சம்பந்தன், சுமந்திரன், செல்வம் போன்ற தமிழினத் துரோகிகளைத் தோற்கடியுங்கள் : கருணா அம்மான்

“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழினத் துரோகிகளை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.”

– இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழர் மகா சபை சார்பாக அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முதன்மை வேட்பாளராகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.

அம்பாறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஊடகவியலாளர் சிவராமின் விருப்பத்துக்கு இணங்க – எனது ஆலோசனைக்கமைய – தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தனை பிரபாகரனே நியமித்தார். இப்படியான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை எனவும், கூட்டமைப்புக்கும் புலிகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தென்னிலங்கை ஊடகங்கள் முன்னிலையில் சம்பந்தன் பொய்யுரைத்து வருகின்றார்.

இதேவேளை, தமிழ் மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றம் சென்றிருந்த கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், இப்போது தமிழரின் ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், முன்னாள் போராளிகளின் மனதைப் புண்படுத்தியும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

இதற்கிடையில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான போதைப்பொருள் விற்பனை மன்னன் செல்வம் அடைக்கலநாதன் என்னைப் பகிரங்க சவாலுக்கு அழைத்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ஆயுதக்குழு கட்சியான ரெலோ கடந்த காலங்களில் வன்னியில் தமிழ் இளைஞர்களைப் படுகொலை செய்ததையும், தமிழ் யுவதிகளை சீரழித்ததையும் நாம் மறக்கவேமாட்டோம்.

இப்படிப்பட்ட கட்சியின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் வெட்கம் இல்லாமல் என்னைச் சவாலுக்கு அழைக்கின்றார். நான் எவருடனும் எந்த நேரத்திலும் சவாலுக்கு வரத் தயாராக இருக்கின்றேன்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழினத் துரோகிகளை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும். இந்த வரலாற்றுக் கடமையைத் தமிழ் மக்கள் தவறாது செய்தே ஆகவேண்டும்” – என்றார்.

Comments are closed.