கொரோனா தாண்டவமாடினால் தேர்தல் நடைபெறுமா? : மஹிந்த தேசப்பிரிய

“இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தால் ஆகஸ்ட் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பதை அப்போதைய நிலைமையைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும்.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்டவாறு இன்று ஆரம்பமாகின்றது. அநுராதபுரம் மாவட்டத்தில் இராஜாங்கனைப் பிரதேச செயலகப் பகுதியில் மட்டும் தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்குமா? இல்லையா? அல்லது ஆகஸ்ட் 5ஆம் திகதி திட்டமிட்டவாறு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை என்னால் இப்போது உறுதிபடக் கூற முடியாது. ஏனெனில், நான் சோதிடம் பார்க்கும் நபர் அல்லன்.

தேர்தல்கள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரை திட்டமிட்ட திகதிகளில் அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

வாக்காளர்களினதும் எங்களினதும் பாதுகாப்புக் கருதி சுகாதார வழிகாட்டல்களுக்கு அதி முக்கியத்துவம் வழங்கி எமது பணிகளை முன்னெடுக்கின்றோம்” – என்றார்.

Comments are closed.