இந்தியாவில் இன்று முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி ஆய்வு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு என தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கும் நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆய்வு தற்போது தொடங்க இருக்கிறது.

குழந்தைகள் மீது தடுப்பூசி ஆய்வுகள் நடத்த, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) கடந்த மே மாதம் 11ம் தேதி அனுமதி அளித்த நிலையில் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 12 முதல் 18 வயதுடைய பிரிவினருக்கு தடுப்பூசி ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் பிரபாத் குமார் சிங் இது குறித்து கூறுகையில், ஏற்கனவே 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் 2 – 6 மற்றும் 6 – 12 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி ஆய்வு தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வானது நாடு முழுவதும் உள்ள உடல்வலிமைமிக்க 525 தன்னார்வலர்களுக்கு நடத்தப்படும் எனவும், அவர்களுக்கு உள் தசையில் வழியாக 28 நாள் இடைவெளியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வயது வரம்பில் (குழந்தைகள்) தடுப்பூசியின் பாதுகாப்பு, அத்துடன், மோசமான எதிர்வினைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து சோதனை ஆராயும். நோயெதிர்ப்பு ரீதியான தரவுகளை பெறுவதற்கான தடுப்பூசியின் திறனும் பரிசோதனையில் ஆய்வு செய்யப்படும்.

முன்னதாக நிதி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால், 2 முதல் 18 வயதுடைய குழந்தைகள், சிறார்கள் மீது ஆய்வு நடத்த கோவேக்ஸின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) அனுமதி அளித்திருப்பதாக கூறினார்.

பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICMR), இணைந்து உள்நாட்டிலேயே தயாரித்துள்ள கோவேக்ஸின் தடுப்பூசியானது கொரோனா தடுப்பூசி செலுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்படுகிறது.

குழந்தைகள் மீதான தடுப்பூசி ஆய்வின் முடிவின் அடிப்படையில் விரைவில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.