ஆடைத் தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.

முல்லைத்தீவில் உள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் நிறைவடையும் வரை ஆடை தொழிற்சாலையைத் திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நேற்று (6) மாலை அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஹைர்ட்றாமணி ஆடைத் தொழிற்சாலையானது இன்று வரை இலங்கையின் கோவிட் -19 தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மூடப்பட்டிருக்கின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கடந்த மாதம் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர்கள், பணியாளர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

அதில் 300க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பரவியிருந்தமை அறியப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டனர். அதனால் இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், ஆடைத்தொழிற்சாலையும் உடன் மூடப்பட்டது.

14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்ட நடைமுறைகள் கடந்த 31ம் திகதியுடன் நிறைவடைந்தன. ஆனால் இன்று வரை ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பிரதேசம் உட்பட மாவட்டத்தின் 9 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

தனிமைப்படுத்தல் சட்ட விதிகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வர்த்தக நடவடிக்கைகள், பொதுப்போக்குவரத்து உட்பட்ட பயண நடவடிக்கைகள், ஒன்றுகூடல்கள், நடமாட்டங்கள் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது கோவிட்-19 சட்ட நடைமுறையாகும். மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுடன் நீதிமன்றிலும் அரசாங்கத்தினால் வழக்கும் தாக்கல் செய்ய முடியும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒன்பது கிராம சேவையாளர் பிரிவுகள் இன்னமும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பிரதேசங்களாகும். தனிமைப்படுத்தல் நீக்கப்படாமையினால் அது நீடிக்கப்பட்டதாகவே அர்த்தமாகும்.

இருந்தபோதும் நாளைய தினம் (07.06.2021) குறித்த ஆடைத்தொழிற்சாலை திறக்கப்பட இருப்பதாகவும் பணியாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் எனவும் தொழிற்சாலை நிர்வாகத்தால் அழைக்கப்பட்டுள்ளனர்.

இது இன்னமும் தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்ட கிராமத்தினுள் குறித்த தொழிற்சாலை இயங்க அனுமதிப்பதானது சட்டத்துக்குப் புறம்பானதோடு சட்ட மீறலாகும். அதுமட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தங்களின் கொள்கைக்கும் நேர் மாறான உதாரணமாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தொற்று அதிகரிப்புக்கு இவ் ஆடைத் தொழிற்சாலையும் முக்கிய காரணமாகும். இன்றுவரை 600க்கு மேற்பட்டவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தலுடன், பயணத்தடையினாலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வறுமையின் எல்லைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

எனவே இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட வகையில் உங்களுக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட பிரதேசங்களின் தனிமைப்படுத்தலை நீக்கும் வரை அவ் ஆடைத்தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என தங்களை அவசரமாகவும், வினயமாகவும் கேட்டுக் கொள்கின்றேன் எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.