ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்சமான அதிகார பகிர்வு : சஜித்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள், அதியுச்சபட்ச அதிகாரப் பகிர்வைத் தமிழ் மக்களுக்கு
வழங்கத் தயாராக இருப்பதாக, ஐக்கிய மக்கள் சக்தியில் தலைவரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஊடகப் பிரதானிகளைக் கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று (13) காலை சந்தித்துக் கலந்துரையாடும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு சஜித் பிரேமதாஸ மேலும் பதிலளிக்கையில்,
“பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள், அனைத்து மக்களும் திருப்திப்படும் அதியுச்சபட்சத் தீர்வை
வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். அரசியல் தீர்வென்பது பிரித்துக் கொடுப்பதாக அமையாது. ஒருமித்த நாட்டுக்குள்தான் அரசியல் தீர்வை வழங்கமுடியும்” என்றார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இன்னமும் சமஷ்டி தீர்வு பற்றித்தானே பேசுகின்றார்கள்.
அதை ஏற்றுக்கொள்வீர்களா?” என்ற கேள்விக்கு,

“நான் வடக்குக்கு விஜயம் செய்தபோது அனைத்துத் தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினேன். அம்மக்கள் எவரும் சமஷ்டி பற்றிப் பேசவில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றே கூறுகின்றார்கள். ஆகையால், மக்களின் ஆசைப்படி அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றார் சஜித் பிரேமதாஸ.

“அப்படியென்றால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை என்றா
அர்த்தப்படுத்துகின்றீர்கள்” எனக் கேட்கப்பட்டபோது, “நான் அப்படிச் சொல்லவில்லை.
மக்கள் சமஷ்டிக் கோரிக்கையை விரும்பவில்லை என்றே கூறினேன். கூட்டமைப்புப் பற்றிக்
கருத்துக் கூறுவது இப்போது பொருத்தமானதல்ல, தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும்
புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்” எனப் பதிலளித்தார் சஜித்.

Thanks : Tamil Mirror

Comments are closed.