கொரோனா நோயாளிகளை ஏற்றிவந்த பஸ் மோதி விவசாயி மரணம்!: யாழ். மட்டுவிலில் பதற்றம்; பஸ் மீது கல் வீச்சு; 5 பேர் கைது (photos)

யாழ். தென்மராட்சி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த வயோதிபர் ஒருவரை கொரோனா நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பஸ் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் குறித்த பஸ் மீது கற்கள் எறியப்பட்டன. அதனால் பஸ்ஸுக்குப் பாதுகாப்புக்குப் பயணித்த இராணுவம் கற்கள் எறிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

மட்டுவிலைச் சேந்த வேலாயுதம் (வயது – 70) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவருவதாவது,

தென்னிலங்கையிலிருந்து 5 பஸ்களில் கொரோனா நோய்த்தொற்றாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாகக் சைக்கிளில் பயணித்த விவசாயி ஒருவரை பஸ் ஒன்று மோதியதில் அவர் வீதியில் சாய்ந்தார்.

சுயநினைவற்ற அவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பஸ்களுக்கு கற்கள் எறியப்பட்டன. வயோதிபரை மோதிய பஸ்ஸின் முன் கண்ணாடி உடைந்தது. அதனால் பஸ்களில் பாதுகாப்புக்காகப் பயணித்த இராணுவத்தினர் கற்கள் வீசியோர் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்.

மேலும், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர். கற்கள் எறிந்தனர் என்ற குற்றச்சாட்டில் பேரைப் பொலிஸார் கைதுசெய்தனர்.

சம்பவத்தையடுத்து விபத்துக்குள்ளான பஸ் தவிர்ந்த ஏனைய 4 பஸ்களும் அங்கிருந்து அனுப்பப்பட்டன.

 

 

Leave A Reply

Your email address will not be published.