சுகாதார முன்களப் பணியாளரின் கொடுப்பனவுகளை அதிகரிக்குக! – மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

சுகாதார முன்களப் பணியாளர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடிப்படைச் சம்பளத்தை அடிப்படையாகக்கொண்ட விகிதக் கொடுப்பனவுகளை வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் அல்லது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கு 180 மணிநேரக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது எனத் தாதியர் தொழிற்சங்கங்கள் தவறாக சித்தரிக்கின்றனர் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் கொரோனாத் தொற்று சிகிச்சை நிலையங்களில் உள்ள மருத்துவர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவர்களுக்கு மாத்திரம் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன என்று கூறி, சில தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார முன்களப் பணியாளர்களின் கொடுப்பனவு முறையில் நன்மை தரும் மாற்றங்களைச் செய்வதற்கான முன்மொழிவுகள் சுகாதார அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் வைத்தியர் பிரசாத் கொலம்பகே மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.