பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்போது மாணவர்களுக்கு வைத்திய பரிசோதனை! – கல்வி அதிகாரிகளுக்குப் மைந்த ஆலோசனை

பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும்போது நீண்ட காலமாக வீட்டில் இருக்கும் மாணவர்களின் நோய் நிலைமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய அவர்களை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் தகுதியுடைய மாணவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலைகளை மீளத் திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என சிறுவர் மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது பிரதமரிடம் தெரிவித்தனர்.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளைப் பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

கொரோனாத் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன் ஏற்பாடாக ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசித் திட்டத்தில் தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், 2 இலட்சத்து 79 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் 3 இலட்சம் கல்விசாரா ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா விளக்கினார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு அரசு எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்களும், ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தினார்.

அத்தோடு பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கையின்போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.