முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் யூடியூபர் மதன் சார்பில் மனு தாக்கல்!

தமிழ்நாடு : ஆன்லைன் விளையாட்டில் ஆபாசமாக பேசிவருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சீன அத்துமீறலை எதிர்த்து இந்திய அரசால் தடை செய்யப்பட்டது தான் பப்ஜி விளையாட்டு. தடைசெய்யப்பட்டாலும் விபிஎன் முறையில் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து பப்ஜி விளையாட்டை விளையாடி வருகிறது சில கும்பல். இந்த பப்ஜி விளையாட்டில் உள்ள ட்ரிக்ஸ் பற்றி பேச 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் மதன் யூடியூப் சேனல்.

சிறுவர்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் பப்ஜி விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேனலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் பப்ஜி விளையாட்டின் ட்ரிக்சைவிட இந்த யூ டியூபில் மணி கணக்கில் ஆபாச வார்த்தைகள் தான் பேசப்படுவதாக புகார்கள் தற்போது எழுந்துள்ளன.

மூளைச்சலவை செய்யப்பட்டு, பப்ஜிக்கு அடிமையான பார்வையாளர்களை தன் ரசிகர்களாக வைத்துக்கொண்டு தன்னை எதிர்ப்பவர்களை சைபர் தாக்குதல் செய்வது மதனின் பாணி. கோடிக்கணக்கான பணமும், ரசிகர்களும் இருப்பதால் எதிர்ப்பவர்களை குடும்பத்துடன் காணாமல் போக செய்து விடுவேன் என்று மிரட்டுவது போன்று வீடியோ ஒன்றும் இணையத்தில் உள்ளது.

இதனிடையே, சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மத்திய குற்றபிரிவு சைபர் கிரைமில் மட்டும் இதுவரை 150 க்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்ததன் அடிப்படையில் துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார், மதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மதன்குமார் மாணிக்கத்திடம் சம்மன் அளிக்க அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததால் போலீஸார் திரும்பினர். இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.