தமிழகத்தில் கொரோனா 3வது அலை வர வாய்ப்பு; குழந்தைகள் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு!

தமிழ்நாடு :  தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை வர வாய்ப்புள்ளதால், குழந்தைகளுக்கான மருத்துவமனைகள், மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 3-வது அலையால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளதாகவும், எந்த நேரமும் குழந்தைகள் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியு படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் பிரிவில் நான்கில் ஒரு பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக தயார் படுத்திட வேண்டும் என்றும், பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களையும் தயார் படுத்திட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து கரும்பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 45 ஆயிரம் மருந்துகள் கேட்கப்பட்டுள்ளதாகவும், 11 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொரோனா 3ம் அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற தகவல் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோரை கண்காணிக்க விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.