எனக்கு எதிராகப் பொய்ப் பிரசாரம்; ஓடி ஒழிய நான் ஒரு கோழை அல்ல – சீறினார் மைத்திரி

“முழு பொலனறுவை மாவட்டத்துக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுத்த எனக்கு எதிராக எனது ஊரைச் சேர்ந்த சில நபர்கள், பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

“இந்தப் பொய்ப் பிரசாரங்களைக் கண்டு ஓடி ஒழிய நான் ஒரு கோழை அல்லன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“ஊரில் உள்ள பெரும்பான்மையானவர்கள் எனது பெறுமதியை அறிந்துள்ளனர். எனினும், சில நபர்கள், பொலனறுவையை மறு நிர்மாணம் செய்த எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறி, ஊரில் உள்ள வாக்காளர்களின் மனதை மாற்ற முயற்சித்து வருகின்றனர்” எனவும் அவர் விசனம் தெரிவித்தார்.

பொலனறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் அறிமுகமான அமெரிக்கா, இந்தியா, சீனா உட்பட பல நாடுகளின் அரச தலைவர்கள் தொடர்ந்தும் என்னுடன் தனிப்பட்ட ரீதியில் நட்பாக இருந்து வருகின்றனர்.

நான் விரும்பும் எந்த நேரத்திலும் அந்த நாடுகளின் தலைவர்களைத் தொடர்புகொள்ள முடியும் அளவுக்கு உறவு வலுவாக உள்ளது. இப்படியான பெறுமதிமிக்க நபரின் பெறுமதியை பொலனறுவையை சேர்ந்த சிலர் மறந்து போயுள்ளனர்.

எனக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறும் நபர்கள் பொலனறுவைக்கு என்ன செய்தார்கள் என்று கேளுங்கள். ஊரைச் சேர்ந்தவனுடைய பெறுமதியை உணர்ந்துகொள்ளுங்கள்” – என்றார்.

Comments are closed.