கிளிநொச்சியில் சமூகப் பரவல் கட்டுக்குள்! – டக்ளஸின் கூட்டத்தில் தெரிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி சரவணபவன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா பரவல் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும், மிகவும் குறைவானவர்களுக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ஆடைத்தொழிற்சாலையை விரைவில் இயங்க வைக்க முடியும் எனவும் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஆடைத் தொழிறசாலை நிர்வாகிகள், ஆடைத்தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்காமல் இருக்குமானால், பணியாளர்கள் வருமான இழப்பை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுளை நிறுத்தி வைக்கும் அளவுக்குக் கொரோனா பரவல் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் மத்தியில் அச்சுறுத்தலாக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தனர்.

அதேவேளை, நடைமுறையில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

சமுர்த்திப் பயனாளர்களுக்கு மாத்திரமே 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்களுக்கும் வழங்குவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் துறைசார் அமைச்சருடனும் குறித்த வாழ்வாதாரக் கொடுப்பனவு தொடர்பாகக் கடற்றொழில் அமைச்சரால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.