The Family Man – Season 2 : இந்தியாவின் நிலையை வெளிக் கொண்டு வந்த சீரியல் : ஜீவன்

The Family Man – Season 2 எனும் 8 எபிசோட்களை கொண்ட சீரியலில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் நடத்த திட்டமிட்ட தாக்குதல் திட்டமொன்று எப்படி ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் என்ன ஆகிறது என்பதே இதன் கதை.

தி பேமிலிமேன் 2 தொடரில் லண்டன் மற்றும் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள், விடுதலைப் புலிகளோடு இணைந்து இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வரவிருக்கும் இலங்கை ஜனாதிபதி ஒருவரை சென்னையில் வைத்து படுகொலை செய்து , இந்திய அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தபடும் திட்டம்தான் படத்தின் கதைக் கருவாக உள்ளது.

தீவிரவாதிகள் அல்லது போராளிகளின் திட்டமிடல்கள், புலனாய்வாளர்களின் தேடல்கள் , இன்னல்கள் போன்றவற்றுடன் நின்றுவிடாது , அரசியல் வரை ஏராளமான குறியீடுகள் மற்றும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த சீரியல் பெருமளவு புகழ் பெறக் காரணமே , இதற்கு எதிராக எழுந்த எதிர்ப்பலைகள்தான். ஆனால் இந்த சீரியலில் உள்ளவை இதுவரை திரையுலகில் எங்குமே பார்த்திராத கதாபாத்திரங்களும் இல்லை. புதுமையான கதையுமில்லை.

ஆனால் இங்கே விடுதலைப் புலிகள் குறித்து பேசப்படுவதை அநேகர் விரும்பவில்லை. பொதுவாக இயக்கங்கள் குறித்து பலர் அறிந்த உண்மைகளைக் கூட எவரும் பகிரங்கமாக பேசுவதோ அல்லது எழுதுவதோ இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் மட்டும் எழுதியோ , பேசியோ வருகிறார்கள். அவற்றைக் கூட எதிர்ப்போரே அதிகமாக உள்ளனர். வெற்றிகளை மட்டுமே பேச முயன்ற சமூகம் , தனது தோல்விகளை பேசவோ அல்லது அதை சரி செய்து கொள்ளவோ முயலவில்லை.

இந்த தொடர் வந்த போது பேசிய அல்லது எழுதியவற்றை மீட்டு பார்த்த போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. பேசிய அனைவருக்கும் நன்றாக பேசத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு இயக்கங்கள் பற்றி எந்த புரிதலும் இல்லை. யாரோ சொன்னதை கேட்டும் , யாரோ எழுதியவற்றை படித்தும் பெற்ற அறிவை வைத்து சரித்திர பாடங்களை மீள போதிப்பது போல போதிக்க முற்படுகிறார்கள்.

சிலர் இந்த The Family Man – Season 2 தொடரில், இலங்கையில் நடந்த அக்கிரமங்களைக் காட்டவில்லை என குமுறுகிறார்கள். அவை யாருமே அறியாததல்ல. தவிர எத்தனையோ படைப்புகளில் அவை தொடர் கதையாக வந்து விட்டன. அங்கு நடந்த அக்கிரமங்களுக்கு பழிவாங்கத் துடிக்கும் தீவிரவாதிகள் சிலரது தாக்குதல் திட்டம்தான் இக் கதையின் ஒரு பகுதி.

அதே சமயம் தீவிரவாதிகள் எப்போதும் மற்ற தீவிரவாதிகளோடு இணைவதோ அல்லது உதவிகளை பெறுவதோ பொதுவான ஒரு விடயம்தான். இங்கே அவர்களுக்கு அவர்களுடைய தேவை அல்லது திட்டத்தை முடிக்க யாரை பாவிக்கலாம் என்பதுதான் முக்கிய கரிசனையாக இருக்குமே தவிர யார் என்பது முக்கியமாக இருக்காது. விடுதலைப் புலிகள் சிங்களவரை எதிர்த்து போராடினார்கள். அதே சிங்களவரின் உதவியை பெற்ற அநேக சம்பவங்கள் கடந்த காலங்களில் உண்டு. இங்குதான் பொது எதிரி என்ற ஒரு பதம் இலை மறை காயாக நகரும்.

விடுதலைப் புலிகள் மேல் தமிழக மக்கள் எந்தளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை The Family Man – Season 2ல் காண்பது பொய்யான ஒரு விடயமல்ல. அன்று ஈழ போராளிகள் மீது தமிழக மக்களுக்கு உண்மையாகவே இருந்தது பாசம். அதனால்தான் அவர்களை பாதுகாத்தார்கள். உதவினார்கள். இன்று பேசும் அநேகர் அக்காலத்தில் ஈழ போராளிகளை யாரென்றே அறிந்ததே இல்லை. இதுவே யதார்த்தமான உண்மை.

ஈழ போராளிகளை வளர்த்த இந்தியாவுக்கு அவர்களது வேர்கள் குறித்தும் , அசைவுகள் குறித்தும் நன்றாகவே தெரியும். இந்திய புலனாய்வாளர்கள் அவர்களுக்கு உதவுவது போல எத்தனையோ வேசங்களில் ஈழ போராளிகளோடு தொடர்புகளை பேணியே வந்துள்ளனர் – வருகின்றனர். அதில் அரசியல்வாதிகளாக ,  ஈழ ஆதரவாளர்கள் போல நடந்து கொண்டு போராளிகளது நடத்தைகள் குறித்து துப்பு கொடுத்து டபள் ஏஜன்ட்டுகளாக செயல்பட்டோர் – படுவோர் இருக்கிறார்கள். இவர்களுக்கு இரு பக்கமும் பணம் கிடைக்கும்.

தீவிரவாத அமைப்புகள் சாதாரண மக்களை எப்படி மூளை சலவை செய்யுமோ , அதுபோல இவர்களும் அமைப்புகளை மூளை சலவை செய்து வைத்திருப்பார்கள். அதை போராளிகளாலேயே உணர முடியாது. இறுதி தருணங்களில் உண்மை தெரியும் போது காலம் கடந்து போயிருக்கும். அதேபோல ஏனைய நாடுகளிலும் அவர்களது தொடர்புகள் உண்டு. அப்படி இல்லையென்றால் அந்த நாட்டு புலனாய்வு துறை பிரயோசனமற்றது. அப்படியான பல விடயங்கள் இந்த The Family Man – Season 2 ல் காட்சியாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த The Family Man – Season 2 தொடரை ஈழ எதிர்ப்பு தொடராக பாராமல் , சற்று ஆழமாக பார்த்தால் பெரியதொரு பாடத்தை கற்றுக் கொள்ளலாம்.

போராட்ட இயக்கங்களில் இருந்தோருக்கு தெரிந்தவை , நுனி புல் மேய்ந்து காதுகளுக்கு கேட்டதை வைத்து புராணம் பாடும் பலருக்கு இவை புரிய வாய்ப்பே இல்லை. The Family Man – Season 2 ல் எவரையும் குறைத்து காட்டியதாக எண்ண முடியாது. அரசு சார்ந்து பகிரங்கமாக செயல்படுவோரால் சுதந்திரமாக நடமாட முடியும். ஆனால் மறைமுகமாக புலனாய்வு பணிகளில் இருப்போர் கூட தம்மை யாரென அடையாளம் காட்டாமல் போலீசிடமே மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் இடம் பெறும். சட்டம் – ஒழுங்கு தொடர்பான பல துறைகள் ஒன்றுக்கு ஒன்று தெரியாத முறையில்தான் செயல்படுகின்றன. ஒரு பகுதியினர் செய்வது இன்னொரு பகுதியினருக்கு தெரியாது. தகவல்கள் கசிந்துவிடும் என்பதால் அப்படி செயல்படுவதுண்டு. இதேபோல தீவிரவாத குழுக்களின் செயல்பாடும் ஒரு பகுதியினரது செயல்பாடுகள் இன்னொரு பகுதியினருக்கு தெரியாது. அதே சமயம் இவர்களால் அரச துறைபோல பகிரங்கமாக செயல்பட முடியாது. அது ஒன்றே அசௌகரியமான ஒரு விடயமாக இருக்கும். கொஞ்சம் பிசகினால் மாட்டிக் கொள்வார்கள். அதைத்தான் The Family Man – Season 2 வில் காண முடிகிறது.

ஈழ விடுதலைக் குழுவின் தலைவர் பாஸ்கரன், அரசியல் பிரிவு தலைவர் தீபன், வெளியுறவு விவகாரங்களுக்கான சுப்பு என்ற மிக முக்கியமான மூவர் இருக்கிறார்கள். அவர்களை எவராகவும் நாம் ஊகித்துக் கொள்ளலாம். இவர்களை வெளிநாடுகளுக்கு சென்று இயங்கிய இரண்டாம் கட்ட தலைவர்களாகவும் நாம் நினைக்கலாம். The Family Man – Season 2 ல் உண்மைகளையும் , எதிர்காலத்தில் இப்படி நடக்கலாம் எனும் எதிர்பார்ப்புகளையும் வைத்தே கதை புனையப்பட்டிருக்கிறது. ராஜிவ் படுகொலை இக் கதையில் சொல்லப்படவே இல்லை. ராஜிவ் படுகொலையின் பின் உள்ள தளம் இந்த The Family Man – Season 2 ல் காட்டப்படவில்லை. ராஜிவ் படுகொலைக்கு முந்திய தமிழக மக்களது ஆதரவுள்ள காலம்தான் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜிவ் படுகொலைக்கு பின் ஈழ ஆதரவு என்பது சாதாரண பொது மக்களிடம் குறைந்து விட்டது. அதற்கு முன்னைய காலத்தில் ஈழ ஆதரவு எனப்பது ஒவ்வொரு தமிழக தமிழரிடமும் வெறியாகவே இருந்து வந்தது.

உலகின் தீவிரவாத அல்லது போராளிகளிடம் 4 படைகள் என்பது போன்ற கட்டமைப்பு இருந்ததில்லை. அப்படி இருந்த ஒரே ஒரு அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்புதான்.அதிலும் விமானப்படை என ஒரு படை புலிகள் இயக்கதில் உருவான போது உலகம் சற்று திகைத்து போனது. அதிலும் இந்தியா , தனக்கு ஆபத்தான ஒன்றாக அதை அவதானிக்கத் தொடங்கியது. தமிழீழம் என்ற தனிநாடு உருவாவதை இந்தியா ஆதரிக்காமைக்கு காரணம் அகன்ற தமிழகம் எனும் ஒரு பிரிவினை பிரச்சனைக்கு இந்தியாவுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்ற காரணத்தால்தான். எனவேதான் ஈழ போராளிக் குழுக்களை ஆதரித்த இந்தியா தனிநாடு என்ற கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதற்கு பதிலாக 13வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபை முறையை கொண்டு வர உதவியது. அதை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை. விடுதலைப் புலிகளைப் போலவே அன்றைய இலங்கை பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவும் விரும்பவில்லை. எனவே எதிரிக்கு எதிரி நண்பன் என்றது போல புலிகளுக்கு பண மற்றும் ஆயுத உதவிகளைக் இலங்கை அரசு கொடுத்து இந்திய படைகளுக்கு எதிராக செயல்பட்டது. அன்று சிங்கள பிரேமதாசவுக்கும் , தமிழ் பிரபாகரனுக்கும் இந்திய படையினர் பொது எதிரியாக தெரிந்தனர். இந்தியா இலங்கையை விட்டு வெளியேறிய பின் மீண்டும் இலங்கை படையினருக்கும் , புலிகளுக்குமான சண்டைகள் தொடங்கியது.

இக் காலத்தில்தான் புலிகளது விமானப்படை மறைந்த கேர்ணல் சங்கர் தலைமையில் செயல் வடிவமானது. வெளிநாடுகளில் விமான ஓட்டிகள் பயிற்றப்பட்டனர். பகுதி பகுதியாக கொண்டு வரப்பட்ட பாகங்கள் பொருந்தப்பட்டு சிறு விமானங்களாக பொருத்தி அசெம்பள் செய்யப்பட்டு பறந்தது மட்டுமல்ல , இலங்கையில் சில தாக்குதல்களையும் புலிகள் நடத்தினர். இதன் காரணமாகவே புலிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் பல நாடுகளிடம் ஏற்பட்டன. குறிப்பாக இந்தியா இந்த விமானப்படை பெரும் பிரச்சனையாகலாம் என கருதியிருக்கலாம். அதுவேThe Family Man – Season 2 முக்கிய கருப் பொருளாக ஆக்கியுள்ளது. புலிகள் இந்தியாவுக்குள் விமானங்களை வாடகைக்கு எடுத்து அல்லது விமானங்களை பொருத்தி விமான தாக்புதல்களை நடத்தலாம் என இந்திய பாதுகாப்பு துறை சிந்தித்த சில விடயங்களை கேட்டறிந்து The Family Man – Season 2 ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ராஜிவ் படுகொலையின் போது ஒரு பெண் வெடி குண்டானது போல , The Family Man – Season 2 ல் சமந்தாவை , ராஜி என்ற பெயரோடு விமானம் ஒன்றை செலுத்தி பலரை அழிக்கக் கூடிய, எதற்கும் அஞ்சாத பெண் கதாபாத்திரமாக நடிக்க வைத்துள்ளனர். சமந்தா செய்யும் செயல்கள் சிலருக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்னை இழந்தாலும் , தனக்கு ஒப்படைக்கப்பட்ட  வேலையை முடிப்பதற்கு அர்ப்பணிப்பாக இருப்பதையே காட்டியுள்ளனர்.

உதாரணத்துக்கு ஒரு விடயத்தை குறிப்பிடலாம். முன்னாள் இலங்கை படைத் தளபதியை படுகொலை செய்ய அவரது வாகன அணி முன் பாய்ந்த தற்கொலைதாரிப் பெண் , அவரோடு பல காலம் வாழ்ந்த ஒரு பெண்தான். இப்படி இன்னொரு பக்கமும் உண்டு. ஒருவருடைய பலவீனத்தை வைத்து தனது எல்லையை நோக்கி நகர்வது என்பதே அது. அதுபோன்ற சில காட்சிகளை பலர் ஏற்க முடியாதோராக இருக்கலாம்.

அதேபோல The Family Man – Season 1 ல் தங்களது குழுக்களை அழித்த மனோஜ் பாஜ்பாயின், மகளோடு நெருக்கமாகும் உறவு மற்றும் கடத்தல் என்பது பழைய தொடரின் பழிவாங்கலாக உணர முடிகிறது.

The Family Man – Season 2 ல் இந்தியா புலிகளை அழிக்க ஆதரவளித்த பல விடயங்களுக்கு மறைமுகமாக விடையளித்துள்ளது. ஹீரோயிச இந்திய சினிமாக்களில் கதாநாயகர்கள் தோற்றால் படம் தோற்றுவிடும். அதனால் The Family Man – Season 2 முடிவு இப்படி இருந்தாலும் , கடைசிவரை பிடிபடாமல் தம்மை அழித்துக் கொள்ளும் கதாபாத்திரங்களும் ஹீரோயிசமாகவே தெரிகிறது.

இந்திய சினிமாக்காரர்கள் என்னதான் இலங்கை அல்லது ஈழம் குறித்து சினிமாக்களை உருவாக்கினாலும் அவர்கள் பேசும் தமிழ் மற்றும் சிங்களம் தப்பாகவே உள்ளது. அதனால் எவர் இந்த படைப்புகளை ஏற்றாலும் இலங்கையர் 100 சதவீதம் ஏற்க மாட்டார்கள். அந்தக் குறை தொடரவே செய்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.