இலங்கையில் மதுபான விற்பனை நிலையங்கள் மீண்டும் திறப்பு! – கலால் திணைக்களம் அறிவிப்பு

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை தளர்த்தப்படவுள்ள நிலையில், மதுபான விற்பனை நிலையங்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய நாளை (21) திறக்கப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாட்டில் உள்ள அனைத்து கலால் உதவி ஆணையாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் கலால் பொறுப்பதிகாரிகளுக்கு கலால் திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்கவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் திறப்பதற்கு அனுமதிக்கப்படுவதால், கலால் அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது மூடப்பட்டுள்ள அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்களுக்குப் போடப்பட்டுள்ள ‘சீல்’களை அகற்றுவதற்கான பொறுப்பை கலால் ஆணையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் கிடைத்தவுடன், அனுமதிப்பத்திரம் பெற்ற பிற இடங்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் கலால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையடுத்து அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பின்னர் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எது எவ்வாறாயினும், மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு 2 ஆயிரம் கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.