கர்ப்பிணி ஆசிரியைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய அரசுப்பள்ளி தலைமையாசிரியர்!

அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வரும் கர்ப்பிணி ஆசிரியைக்கு, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், போலீசார் முன்னிலையிலேயே அவரை மிரட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலங்களாகவே ஆசிரியர்கள் மீது மாணவிகளும், பயிற்சியாளர்கள் மீது வீராங்கனைகளும் அளித்த பாலியல் ரீதியிலான புகார்களும் அது தொடர்பான நடவடிக்கைகளும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வரும் 7 மாத கர்ப்பிணி ஆசிரியை ஒருவருக்கு, அதே பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் பாலியல் தொந்தரவும், வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ்களும் அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள எகல்சிங்காவில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் தன்னுடைய பள்ளியில் தலைமை ஆசிரியையான தேவேந்திர குமார் சங்கலா என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு, வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பி, மிரட்டுவதாக பினாய் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்திருக்கும் புகாரில், மேற்கண்ட பள்ளியில் 5 மாதங்களுக்கு முன்னர் தான் நியமிக்கப்பட்டதாகவும், இடைப்பட்ட காலங்களில் 7 மாத கர்ப்பிணியான தனக்கு தலைமை ஆசிரியர் தேவேந்திர குமார் சங்கலா, வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பியதாகவும், தான் அதற்கு ஆட்சேபம் தெரிவித்ததால் அவரின் பதவியை பயன்படுத்தி தனக்கு நெருக்கடி கொடுத்து தன்னை அவமதிக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேண்டுமென்றே என்னை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றினார். ஆனால் நான் கர்ப்பமாக இருப்பதால் அங்கே சென்று பணியில் சேர இயலவில்லை என கேட்டேன். தலைமை ஆசிரியரின் நடவடிக்கைகள் மோசமாகிக்கொண்டே சென்றதால் ஒரு கட்டத்தில் வேலையில் இருந்து ராஜினாமா செய்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வந்த போது, கர்ப்பிணி ஆசிரியையை காவல்நிலையத்தில் வைத்தே தலைமை ஆசிரியரான தேவேந்திர குமார் சங்கலா, காவலர்கள் முன்னிலையில் மிரட்டியதால் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்ப்பிணி என்றும் பாராமல் தலைமை ஆசிரியர், சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு அளித்ததோடு மிரட்டிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.