அதிக எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்து அசாம் பெண் சாதனை

அசாம் மாநிலம் சச்சர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயா. அவரது கணவர் படல்தாஸ். இந்நிலையில் 27 வயதான ஜெயா கர்ப்பமாக இருந்துள்ளார். ஜெயாவிற்கு பிரசவ தேதி மே 29 என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிரசவ நேரத்தில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தயங்கியுள்ளனர். பின்னர் வேறுவழியின்றி ஜெயாவை ஜூன் 15 ஆம் தேதி சதிந்திரா மோகன் தேவ் அரசு மருத்துவமனைக்கு அவரது கணவர் படல் அழைத்துச் சென்றுள்ளார்.

பொதுவாகக் கர்ப்பம் தரித்து 38 முதல் 42 வாரங்கள் வரையிலான காலங்களில் பெண்களைப் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர். ஆனால் ஜெயாவிற்கு சற்று தாமதமானதால் அனைவருக்கும் பயம் இருந்துள்ளது.

இதனையடுத்து டாக்டர் ஹனிஃப் உள்ளிட்ட சீனியர் டாக்டர்கள் மேற்பார்வையில் சிசேரியன் முறையில் ஜெயாவிற்கு பிரசவம் நடைபெற்றது. அப்போது நர்ஸ் ரோஸ்லின் மஞ்சருல், ஆனஸ்திஸியா ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ராஜட் டெப் ஆகியோர் இணைந்து ஜெயாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். மருத்துவர்களின் சீரிய முயற்சியால் ஜெயா, குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுத்துள்ளார். ஆனால் குழந்தை 5.2 கிலோகிராம் எடை இருந்துள்ளது.

பொதுவாகப் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் 2.5 கிலோகிராம் எடை இருக்கும். சில நேரங்களில் 4 கிலோ கிராம் வரை எடை இருந்திருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை ஒன்று 5.2 கிலோகிராம் வரை எடை இருப்பது இதுவே முதன் முறை.

இது புதிய ரெக்கார்டு என அந்த மருத்துவமனையின் சீனியர் மருத்துவர் லஸ்கர் தெரிவித்துள்ளார். ஜெயாவிற்கு இது இரண்டாவது குழந்தை. மேலும் அவருக்குப் பிறந்த முதல் குழந்தையும் 3.8 கிலோகிராம் எடை இருந்துள்ளது

ஜெயாவும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயாவை மருத்துவமனைக்கு அழைத்து வரத் தாமதமானதால் பயந்துபோன அவரது கணவர் படலுக்கு மருத்துவர்களின் வார்த்தை மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

இதனையடுத்து படல் மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். ஜெயாவிற்கு உறவினர்களிடமிருந்து மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறதாம்.

கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான காலத்தில் மக்கள் கேள்விப்படும் செய்திகள் அவர்கள் பயமுறுத்தி வருவதால் பிரசவம் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்குக் கூட வெளியே வரத் தயங்குகின்றனர். இந்த செய்தியின் எதிரொலியாக அரசு பிரத்யேகமாகக் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கெனப் பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.