கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பட்டினியில் கிடந்து சாகும் நிலை! – அரசை சாடுகின்றார் வடிவேல் சுரேஷ் எம்.பி.

நாட்டு மக்கள் கொரோனாவிலிருந்து மட்டுமல்ல பட்டினியில் கிடந்து சாகும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

“நாட்டில் தற்போது நிலவுகின்ற நெருக்கடி மிக்கச் சூழலில் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். விசேடமாக மலையக மக்கள் திட்டமிட்டு அரசாலும் பெருந்தோட்டக் கம்பனிகளாலும் முழுமையாக ஓரங்கட்டப்பட்டு வருகின்றனர்.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்குப் பின்னர் பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிலாளர்களின் வேலைநாட்களைக் குறைத்து வேலைச் சுமைகளை அதிகரித்துள்ளதால் இன்று பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களாக பெருந்தோட்ட மக்களே உள்ளனர்.

நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் மிகவும் பின்தள்ளப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த அரசு பொறுப்புவாய்ந்த அரசு என்றால் இந்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்கியிருக்கலாம்.

இந்த நாடு தற்போது எங்கே சென்றுக்கொண்டிருக்கின்றது? மலையகத்தில் கொழுந்துப் பறிப்பதற்கும் சீனாவிலிருந்து பெண்களை அழைத்துவரப் போகின்றனரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.