கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பா?இரா.சாணக்கியன்.

தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

துமிந்த சில்வா அவர்களின் விடுதலையை நியாயப்படுத்தும் முகமாக அவர்களின் கீழ் இயங்கும் சில ஊடகங்கள் செயற்படுகின்றன. அவ்வாறான ஊடகம் தற்போதையை ஜனாதிபதியை ஜனாதிபதியாக்குவதற்கும் தற்போதைய அரசாங்கத்தினை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கும் கடுமையாகப் பாடுபட்ட ஒரு ஊடகம். ஆனால் கடந்த சில மாதங்களாக அரசினை தாக்கி அரசிற்கு எதிரான செய்திகளை வெளியிட்டதை அவதானிக்க முடிந்தது. நாட்டிலே மக்களின் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க ஒரு நடிகையைக் கைது செய்தது தான் பெரிய பிரச்சினை போன்று வெளிப்படுத்தி அரசிற்கு பாரிய அழுத்தங்களைக் கொடுக்கும் முகமாகச் செயற்பட்டது. அந்த நேரத்திலே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது துமிந்த சில்வா அவர்களை விடுதலை செய்வதற்காக ஒரு நாடகமாக இது இருக்கலாம் என்று. அது போலவே நடந்து விட்டது.

தற்போது அவரை விடுதலை செய்ததற்கு அவர் போதியளவு சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதாக அமைச்சர் நாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ததாகச் சொல்லி உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் தண்டனை வழங்கிய ஒருவர் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானதாக இருந்தால். போராட்ட காலத்தில் ஏதோவொரு அடிப்படையில் கைது செய்து பல வருடங்களாகச் சிறையில் வாடும் அரசியற் கைதிகள் அனைவரையும் ஏன் இதுவரை விடுதலை செய்யவில்லை என்ற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கின்றது.

ஏனெனில் இன்று அரசியற் கைதிகள் என்று நாங்கள் கூறும் எவருமே தங்களின் சொந்தத் தேவைக்காகவோ, தனிப்பட்ட நலனுக்காகவோ தாக்கியவர்களோ அல்லது கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தவர்களோ அல்ல. அவர்கள் எதோவொரு விதத்தில் தங்களின் இனத்தின் விடிவுக்காகப் போராடிய குற்றச்சாட்டில் சில சில தவறுகளுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொலைசெய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவிதித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது.

மேலும் ,ஜனாதிபதி அவர்கள் தனது முதலாவது உரையிலே தெரிவித்திருந்தார் ஒரு நாடு ஒரு சட்டம் என்று. ஆனால் இங்கு ஒரு நாடு எத்தனையோ சட்டங்களாகப் போய்க்கொண்டிருப்பதையே அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.