ரிஷாத்தின் கட்சியை புறக்கணித்தது ஏன்? : மனோ, ஹக்கீமிடம் பாயிஸ் கேள்வி

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில், மூன்று கட்சிகள் இணைந்து நடத்திய சந்திப்பு, பாதிக்கப்படப்போகும் சிறுபான்மைக் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ள முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.ஜே.எம்.பாயிஸ், இந்தச் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் தனது வருத்தத்தைத் தெரிவித்து பாயிஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தேர்தல் முறைகளை மாற்றவேண்டும் என்பது தொடர்பில் அரசும் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் விடாப்பிடியாக நின்று காய்களை நகர்த்தி வரும் இத்தருணத்தில், அநுரகுமார திஸாசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், கொழும்பில் நேற்று சந்தித்து, இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் காத்திரமான முடிவுகளையும் மேற்கொண்டிருப்பதாக இன்று ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கடந்த காலங்களில் இவ்வாறான அனைத்து சந்திப்புக்களிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அழைக்கப்பட்டிருந்ததுடன் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீன் பிரதான பாத்திரமும் வகித்திருந்தார்.

கடந்த அரசின் அரசமைப்பு வழிகாட்டல் குழு, அரசியல் யாப்பு சபையிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கிய பங்காற்றியதுடன், இந்தக் கட்சிகளுடன் இணைந்து கூட்டாகவும் தனியாகவும் அறிக்கைகள் சமர்ப்பித்திருந்தமையையும் நாம் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் நான்கு எம்.பி க்களையும், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளையு ம் பெற்றிருப்பதும், 08 உள்ளூராட்சி சபைகளை ஆளுகை செய்வதும் வெளிப்படையானது.

அத்துடன், மேல் மாகாண சபை உட்பட நாட்டின் பல மாகாண சபைகளில் பிரதிநிதிகளையும் வென்றெடுத்திருக்கின்றது. இந்தச் சூழலில் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஓரங்கட்டியது ஏன்?

தலைவர் ரிஷாத் பதியுதீனை தடுப்புக் காவலில் வைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு மேலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடம்பெறாத நிலையில், ஆகக் குறைந்தது இவ்வாறான கூட்டங்களிலாவது கட்சியை அழைத்திருக்க வேண்டுமல்லவா?

தலைவரின் தடுப்புக் காவலையடுத்து கட்சியின் உயர்பீடம் கூடி, அவரது பொறுப்புக்களை சில முக்கியஸ்தர்களுக்கு பகிர்ந்தளித்துள்ள நிலையில், பிரதித் தலைவர், செயலாளர், தவிசாளர் ஆகியோருக்கேனும் அழைப்பு விடுத்து இந்தக் கூட்டத்தில் கட்சியின் பிரதிநிதிகளுக்கு அந்தஸ்து வழங்கியிருக்கலாமே” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.