தீர்வைத் தருவது அரசின் கடமை; அதற்காக அடிபணியமாட்டோம்! – சம்பந்தன்

“தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும். அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“சர்வதேச சமூகம் இன்று தமிழர்களின் பக்கமே நிற்கின்றது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றபடியால்தான் அது எங்கள் பக்கம் நிற்கின்றது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“எந்த அரசு ஆட்சியமைத்தாலும் அந்த அரசுடன் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. கடந்தகால அனுபவங்களைக் கருத்தில்கொண்டு புதிய அரசுடன் நாம் பேச்சு நடத்துவோம். சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இந்தப் பேச்சு நடத்தப்படும்.

தமிழ் மக்கள் விரும்பும் நியாயமான தீர்வை வழங்க அரசு முன்வந்தால் அதை நாம் மனதார ஏற்போம். ஒருமித்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடனான தீர்வையே தமிழர்கள் விரும்புகின்றார்கள் என்பதை கடந்த அரசிடமும் இந்த அரசிடமும் நாம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

எனவே, எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் விரும்பும் தீர்வைத் தந்தே ஆகவேண்டும். இல்லையேல் சர்வதேசம் அடுத்தகட்ட நடவடிக்கைளை எடுக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேசைக்குச் செல்ல வேண்டுமெனில் அசைக்க முடியாத பலத்துடன் செல்ல வேண்டும். எனவே, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கடந்த தடவையை விட இந்தத் தடவை மேலும் அதிகரிக்கச் செய்ய நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ‘வீடு’ சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும்” – என்றார்.

Comments are closed.