17 வயது சிறுவனின் உடலில் இருந்து1 கிலோ சிறுநீரகக் கல் நீக்கம்! இலவசமாக ஆப்ரேஷன் செய்த மும்பை மருத்துவர்..

மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், 17 வயது சிறுவனுக்கு சிறுநீர் பையில் இருந்து சிறுநீரகக் கல் நீக்க அறுவை சிகிச்சை செய்து முடித்தார். அந்த கல், ஒரு தேங்காய் போன்ற அளவில், 1 கிலோ எடை இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த சிறுவனுக்கு ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், இந்த சிகிச்சை இலசவமாக செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவர் ராஜீவ் ரெட்கர், சிறுவன் ரூபன் ஷேக்காவுக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ளார். இரண்டாவது முறையாக இந்த சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம், சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷேக் பிறக்கும் போதே, உடலுக்கு வெளியில் காணப்படும் சிறுநீர்பை மற்றும் குறைபாடுள்ள ஆண்குறி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் எக்ஸ்ட்ரோபி-எபிஸ்பாடியாஸ் காம்ப்ளக்ஸ் (ஈ.இ.சி) நோயால் பாதிக்கப்பட்டவர், இது ஒரு அரியநோயாகும். மேலும், 1,00,000 குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், வெளிப்புறத்தில் காணப்படும் சிறுநீர்ப்பையில் சிறுநீரை சேமிக்கவோ அல்லது சாதாரணமாக சிறுநீர் கழிக்கவோ முடியாது, இதன் விளைவாக சிறுநீர் கசிவு ஏற்படும்.

ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் ரெட்கர், வாடியா மருத்துவமனையில் பயிற்சியாக பணிபுரிந்த நேரத்தில், ​​அவர் இச்சிறுவனுக்கு ஈ.இ.சி. சிகிச்சை அளித்தார். இந்த சிகிச்சை சிறுநீர்ப்பையின் அளவை பெரிதாக்க செய்யப்பட்டது. மேலும், மிட்ரோஃபனோஃப் என்ற சிகிச்சையும் செய்யப்பட்டது. இதில், குழந்தையின் வயிற்றில் ஒரு புதிய குழாயைப் பொருத்தப்பட்டது. இந்த வடிகுழாயைப் பயன்படுத்தி குழந்தையால் சிறுநீர் கழிக்க முடியும்.

“இந்த டியூப், அப்பெண்டிக்ஸிலிருந்து தயாரிக்கப்பட்டது. மற்றும், இது தொப்புளில் ஒரு சிறிய துளை போடப்பட்டு, அதன் வழியே சிறுநீர் பையுடன் இணைக்கப்படுகிறது. சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிந்தாலும், அச்சிறுவன் கொல்கத்தாவிற்கு சென்று விட்டதால், உடல்நிலையைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.” என்று தெரிவித்த மருத்துவர் ரெட்கர் தற்போது, மஹிம்-ஃபோர்டிஸ் அசோசியேட், எஸ்.எல். ரஹேஜா மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சை ஆலோசனை நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த மாதம், டாக்டர் ரெட்கருக்கு சிறுவனிடம் இருந்து அழைப்பு வந்தது. கடுமையான அசௌரியம், வலி ​​மற்றும் சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக சிறுவன் கூறினான். மேலும் தனது உள்ளூர் பாதுகாவலருடன் 2,000 கி.மீ தூரம் பயணித்து டாக்டர் ரெட்கரின் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

ஜூன் 30ம் தேதி, மருத்துவர் ரெட்கர், சிறுநீரக மருத்துவர் ஆலோசகர் மருத்துவர் சுரேஷ் பாகத், மற்றும் எஸ்.எல்.ரஹேஜா மருத்துவமனையின் நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் அஸ்மிதா மகாஜன் ஆகியோருடன் அறுவை சிகிச்சை செய்து, சிறுவனின் சிறுநீர்ப்பையில் இருந்து ஒரு பெரிய கால்சியம் ஆக்சலேட் கல்லை அகற்றினார், இது கிட்டத்தட்ட 13.4 ”நீளம் மற்றும் ஒரு கிலோகிராம் எடை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் சிறுவனின், வளர்ந்த சிறுநீர்ப்பையை சீரமைத்தனர். இது ஒரு சவாலான மருத்துவ செயல்முறை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“ரூபன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நன்றாகத் தேறி வருகிறான். அவனது சிறுநீரகங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகின்றன. இதுபோன்ற நிலை கொண்ட நோயாளிகள் அடிக்கடி மருத்துவ ஆலோசனைகள் பெற்று, சோதனைகள் மூலம் எந்த பிரச்சனைகள் வழியே நீண்டகாலமாக நிர்வகிக்கலாம்” என்றும் டாக்டர் ரெட்கர் கூறினார்.

“சிறுவன் பணம் இல்லாமல் உள்ளூர் பாதுகாவலனுடன் வந்தான். சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால், அது அவனது உயிர்க்கு ஆபத்தாக மாறியிருக்கலாம். எனவே, இதைப் பற்றி குறித்து மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டபோது, ​​சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இலவசமாக சிகிச்சை அளிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்” என்று மகிழ்ச்சியோடு அவர் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.