அமிர்தலிங்கம் ஒரு இணையற்ற தலைவர் — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் —

அமிர்தலிங்கத்தின் முப்பத்தி இரண்டாம் (32) ஆண்டு நினைவஞ்சலி தினத்தையொட்டி 
(13.07.2021) இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

இன்றுடன் (13.07.2021) தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 13.07.1989 அன்று கொழும்பில் வைத்து , தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தொகுதி முன்னாள் பா.உ வெ.யோகேஸ்வரனுடன் சேர்த்து சுட்டுக்கொல்லப்பட்டு முப்பத்தியிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

அமரர் அ.அமிர்தலிங்கத்தின் அரசியற் செயற்பாடுகள் குறித்து பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட (உலகில் விமர்சனத்திற்குட்படாத விடயங்களும் இல்லை. விமர்சனத்திற்குட்படாத நபர்களும் இல்லை. மகாத்மா காந்தியின் மீது கூட விமர்சனப் பார்வைகள் உண்டு) அந்த விமர்சனங்களையெல்லாம் கடந்து, ‘தந்தை செல்வா’ என அழைக்கப்பெற்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் பின் இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைவனாக விளங்கியவர்.

தமிழரசுக் கட்சியினதும் – தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் தற்போது தமிழரசுக் கட்சி தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் கொள்கைகள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்த போதிலும் (அப்படியான விமர்சனங்களைச் ‘சொல்லத் துணிந்தேன்’ பத்தித் தொடர் நிறையக் கொண்டிருக்கிறது) அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளைச் சட்டக் கல்லூரி மாணவராக இருக்கும் போதே அதாவது தனது வாலிப வயதிலிருந்தே வரித்துக் கொண்டு, தமிழரசுக் கட்சியில் இணைந்து, அக்கட்சியின் கொள்கைத் தடத்தில் தன்னளவில் தனது மரணம் வரை தடுமாற்றம் இல்லாமல் பயணித்த ஓர் அரசியல் தலைவன் என்ற வகையில் இப்பத்தி அவரை நினைவு கூருகிறது.
புலிகளின் துரோகம்

அமிர்தலிங்கத்தைப் புலிகள் கொன்றது இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியல் வரலாற்றில் அவ்வியக்கம் இழைத்த மாபெரும் நம்பிக்கைத் துரோகமாகும். நாகரீகமான மக்கள் சமுதாயம் மன்னிக்க முடியாத மிகவும் மிலேச்சத்தனமான செய்கையுமாகும்.

ஆயுதப்போராட்ட காலத்தில் தமிழ்ப் போராளி இயக்கங்கள் ஆங்காங்கே புரிந்த வன்முறைச் சம்பவங்களுடன், அவருக்கு உடன்பாடில்லை என்றபோதிலும் கூட, அப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாயினும் இலங்கை அரசாங்கத்தின் ஆயுதப் படையினரிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற என்றுமே அவர் தவறியதில்லை.

ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது

இலங்கை அரசாங்கத்தின் இன ஒடுக்கு முறைகளுக்கெதிராகத் தமிழ் இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த காலம். ஒரு நாள் யாழ்ப்பாணத்தில் ஆயுதப் படையினர் சில இளைஞர்களைத் தேடி சந்தேகத்தின்பேரில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை அலுவலகத்திற்குள் ஒடுக்கமான வழியொன்றினூடாக நுழைகிறார்கள். அதனைக் கண்ணுற்ற அன்று அலுவலகத்தில் பிரசன்னமாகியிருந்த அமிர்தலிங்கம் அவர்கள், தனது இரு கைகளாலும் உள் நுழைய முயன்ற ஆயுதப் படையினரை வழிமறித்து அவர்களை அப்படியே தள்ளிக் கொண்டுபோய் நுழைவாயிலில் நிறுத்துகிறார். அப்போது இலங்கைப் பாராளுமன்றத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவர். அமிர்தலிங்கத்தை ஒன்றும் செய்யமுடியாத ஆயுதப் படையினர் ஆத்திரத்தில் அலுவலகத்தின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைசிக்கிள்களைக் காலால் உதைத்து வீழ்த்தி விட்டுச் சென்றனர். அலுவலகத்தில் அப்போது அங்கு நின்றிருந்த தமிழ் இளைஞர்கள் பின் வழியாகத் தப்பிச் செல்வதற்கான கால அவகாசத்தை வழங்கவே அவ்வாறு அவர் நடந்து கொண்டார். அன்று அவர் மட்டும் அவ்வாறு நடந்திராவிட்டிருந்தால் விரும்பத்தகாத அனர்த்தங்கள் அங்கு நிகழ்ந்திருக்கும்.

தனக்குச் சரியெனப்பட்டதெனக் கருதும் விடயத்தில் அவருக்கிருந்த தணியாத உறுதிப்பாடு அவரது தலைமைத்துவ ஆளுமைக்குப் பெறுமதி சேர்ப்பதாகும்.

தனது கருத்தை துணிச்சலுடன் முன்வைப்பவர்

1980இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களினால் கொண்டுவரப்படவிருந்த மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டமூலத்தை (DISTRICT DEVELOPMENT COUNCIL BILL) தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரிப்பதா? இல்லையா? என இறுதி முடிவு எடுப்பதற்கான தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சிக் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழீழத் தனிநாடு அமைப்பதற்குரிய ஆணையைத் தமிழ் மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதே தமிழ் இளைஞர்களின் கோரிக்கையாகவிருந்தது. அன்று நிலவிய இக்கட்டான சூழ்நிலையில் கூட்டம் நடைபெற்ற வவுனியா நகரசபை மண்டபத்தின் கதவுகள் ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்டுத்தான் கூட்டம் ஆரம்பமானது.

மண்டபத்திற்கு வெளியே தமிழ் இளைஞர் கூட்டம் கொதிநிலையில் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரிக்கக் கூடாது என ஆரவாரம் எழுப்பிக் கொண்டிருந்தனர். உள்ளே காரசாரமான வாதப்பிரதிவாதங்களுடன் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அமிர்தலிங்கத்திற்கும் ஈழவேந்தனுக்குமிடையே விவாதம் முற்றி ஈழவேந்தன் எழுந்து அமிர்தலிங்கத்தை நோக்கி நெருங்குகிறார்.

ஈழவேந்தன் அமிர்தலிங்கத்தைத் தாக்க முற்படுகிறார் எனத் தவறாகப் புரிந்து கொண்ட பருத்தித்துறைத் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெத்தினம் தான் முந்தி ஈழவேந்தனைத் தடுக்க முற்படுகிறார். இப்படிப் பதற்றமான ஒரு சூழ்நிலையில்தான் கூட்டம் நடைபெற்றது.

அன்று தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தால் தமிழ் இளைஞர்கள் அமிர்தலிங்கத்தைத் தங்கள் தோள்களில் சுமந்து வவுனியா வீதிகளில் வலம் வந்திருப்பார்கள்.

ஆனால் அமிர்தலிங்கம் அவர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டமூலத்தின் நகலை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஷரத்தாகப் படித்து விளக்கம் சொல்லி பலத்த சூடான வாதப் பிரதிவாதங்கள் மத்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணி மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் ஆதரிப்பதெனக் கூட்டத்தில் முடிவெடுக்க வைத்தார்.

அந்த முடிவு சரியா? பிழையா? என்பது அரசியல் விமர்சனத்திற்குட்பட்டது. அது வேறு விடயம். ஆனால், தனக்குச் சரியெனப்பட்ட ஒரு விடயத்தின் மீது அவர் எவ்வளவு உறுதிப்பாட்டுடன் இருந்தார் என்பதையும் ஒரு உறுதியான தலைமைத்துவத்திற்கு இருக்கவேண்டிய தலைமைத்துவப் பண்பை அவர் கொண்டிருந்தார் என்பதையும் வெளிப்படுத்தவே இந்த நிகழ்வு இங்கு பதிவுக்குள்ளாகிறது.

அந்தரங்க சுத்தியோடு பணியாற்றிய தலைவர்

இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட அரசியலில் அவர் திட்டமிட்ட-எதிர்பார்த்த அரசியல் இலக்குகள் வெற்றி அடையாமல் விட்டிருக்கலாம். அது வேறு விடயம். ஆனால் அந்தரங்க சுத்தியோடு அவர் பணியாற்றினார். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக உள்ள இரா.சம்பந்தன் போல் இரட்டை வேட அரசியல் என்றும் அவரிடம் இருந்ததில்லை. சில நேரங்களில் மூக்கில் கோபம் என்பார்களே அதுபோல் கோபம் கொண்டாலும் அடுத்த கணமே அக்கோபம் ஆறிவிடுகின்ற குழந்தை மனமே அவரிடம் குடிகொண்டிருந்தது.

இப்போது கூலிக்கு மாரடிக்க வந்த கூட்டமே தமிழ்த் தேசிய அரசியலை குத்தகைக்கு எடுத்துக் குத்துக்கரணம் போடவைக்கிறது. பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் இன்றைய தமிழரசுக்கட்சி, வழிப்போக்கர்களின் கூடாரமாகிவிட்டதென்ற கூற்று இதனை ருசுப்படுத்துகிறது.

நேர்மை, ஒழுக்கம், பண்பாடு

இலங்கையில் ‘கறுப்பு ஜூலை’ என வர்ணிக்கப்படுகின்ற 1983 ஜூலையில் நடைபெற்ற நாடளாவிய இனக்கலவரம் நடந்த நேரத்தில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு மன்னாரில் நடைபெற்று முடிந்திருந்தது.

அப்போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் தமிழர்களுக்கு எதிரான இனத்துவேச நடவடிக்கைகளுக்கு மத்தியிலே எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அமிர்தலிங்கம் கூட தமிழர் என்றபடியால் மாநாடு முடிந்து கொழும்புக்குத் திரும்புவது பாதுகாப்பில்லாமல் இருந்தது.

அந்தப் பீதிக்கு மத்தியிலேயே அமிர்தலிங்கம் அவர்கள் மக்கள் பணிக்காகத் துணிந்து ‘பாதிரியார்’ வேடத்தில் கொழும்புக்குப் பயணித்து முன்னாள் அமைச்சர் அமரர் தொண்டமானின் வீட்டில் பாதுகாப்பாகத் தங்கிப் பின் இந்தியாவுக்குப் (தமிழ்நாடு) போய்ச்சேர்ந்தார். அங்கு போய்ச் சேர்ந்ததும் தனது இராஜதந்திரக் கடவுச்சீட்டைச் சென்னையில் உள்ள இலங்கையின் உதவித் தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்தமை அவரது நேர்மையையும் -ஒழுக்கத்தையும்-பண்பாட்டையும் பறைசாற்றுகிறது.

உண்மையில் தந்தை செல்வா அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலின் பலம் மற்றும் அதன் தத்துவார்த்தப் பலவீனங்களோடு ஓர் அடையாளமாக-குறியீடாகத்தான் விளங்கினார். தீவிரமாகச் செயற்படுவதற்குத் தந்தை செல்வாவின் மூப்பும்-உடல் பலவீனமும் -அவரைப் பீடித்திருந்த ‘பார்க்கின்சன்’ நோயும் -காது கேளாத தன்மையும் தடையாயிருந்தன. ஆனாலும் அவர் 1949இல் தமிழரசுக் கட்சியை தோற்றுவித்துச் சுய நிர்ணயம் மற்றும் தாயகக் கோட்பாட்டின் அடிப்படையில் அவர் ஆரம்பித்து வைத்த தமிழ்த்தேசிய அரசியலுக்கு (அவ் அரசியல் யாழ்.மேலாதிக்க மேட்டுக்குடி வர்க்கக் குணாம்சத்தைக் கொண்டிருந்தது என்பது விமர்சனத்துக்குட்பட்ட விடயம்) ஒரு போராட்ட வடிவத்தை -பரிமாணத்தைக் கொடுத்தவர் தமிழரசுக்கட்சியின் ‘தளபதி’ என வர்ணிக்கப்பெற்ற அமிர்தலிங்கமேதான்.

கிழக்கு மாகாணத்தில் அதிக காலடிகள் பட்ட வட மாகாணத்தின் தமிழ்த் தலைவர் யார் என்றால் அது அமிர்தலிங்கமேதான். கிழக்கு மாகாணத்திலுள்ள குக்கிராமங்களின் குச்சொழுங்கைகள் கூட அமிர்தலிங்கம் அவர்களுக்கு அத்துப்படியென்பது மிகைப்பட்ட கூற்றல்ல. ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியினதும் பின்னாளில் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் அடிமட்டத் தொண்டர்களைக் கூட அவர் ஊர் பெயர் தெரிந்து வைத்திருந்தார். ஒரு கட்சித் தலைவனுக்கு இருக்க வேண்டிய பண்பு இது.

1958ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் நாடளாவிய சிங்கள -தமிழ் இனக்கலவரம் நடந்த வேளையில் சமகாலத்தில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு வவுனியாவில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலிருந்து பரவிய ஒரு தவறான வதந்திதான் கலவரம் தோன்றக் காரணமாயிருந்தது.

நாடு முழுவதும் தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்ததொரு சூழ்நிலையில் மட்டக்களப்பில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரச தலைவரான பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டாரநாயகாவுக்கு அறிக்கையிடுவதற்காக, அமிர்தலிங்கம் அவர்கள் வவுனியா மகாநாடு முடிந்து நிலவழிப் பயணத்தின் மூலம் மட்டக்களப்புக்கு வரமுடியாத நிலையில் அம்மாநாட்டுக்குச் சென்றிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த செனட்டர் மாணிக்கம், அவரது மகள் கலா மாணிக்கம், இரா.பத்மநாதன் மற்றும் சாம் தம்பிமுத்து ஆகியோர் சகிதம் படகில் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வந்த வரலாறும் உண்டு. இந்தக் கடல் வழிப் பயணத்தின் போதுதான் செல்வி கலா மாணிக்கத்துக்கும் சாம் தம்பி முத்துவுக்குமிடையில் (அருண் தம்பிமுத்துவின் பெற்றோர்) காதல் அரும்பிய கதையுண்டு.

அமிர்தலிங்கத்தின் வாழ்க்கை வரலாறு முழுவதும் அவர் பிரச்சினைகளிலிருந்து நழுவி ஓடிமறைந்தவராக இல்லாமல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற துணிவுமிக்க தலைவராகவே தன்னை எப்போதும் வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு மேற்படி படகுப் பயணமும் ஒரு ‘சோற்றுப்பதம்’ ஆகும்.

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்திய தலைவர்

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கிய இனப்பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்படுவதற்கு ஆயுதப் போராட்டமும் ஒரு காரணியாக இருந்தபோதிலும், தமிழர்களுடைய பிரச்சினை சர்வதேச மயப்படப் ‘பிள்ளையார் சுழி’யிட்டு 1983/89 காலப்பகுதியில் ‘நெம்புகோல்’ ஆக நின்று உழைத்தவர் அமிர்தலிங்கமே. இலங்கைத் தமிழர் பிரச்சினை சர்வதேசமயப்படுவதற்கு ஒருவகையில் இந்தியாவும் ஆதரவுக் காரணியாக இருந்தது.

1983 ஜூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து இந்தியா (தமிழ்நாடு) சென்ற அமிர்தலிங்கம் அவர்கள் முன்னாள் இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையாரைச் சந்தித்தார். பின்னர் அன்னை இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரிலும் ஏற்பாட்டின் பேரிலும் சில மேற்குலக நாடுகளுக்கும் சென்றார். இவ்வாறுதான் இலங்கைத் தமிழர் பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப் பெற்றது. இந்தியாவில் பிரதமர் இந்திரா காந்தியை மட்டுமல்ல இந்திரா காந்தியின் ஆலோசனைப்படி ஏனைய அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்.

இந்திரா காந்தியைச் சந்தித்து அவர் தொடக்கி வைத்த முயற்சிகள்தான் இந்திராகாந்தியின் கொலை (31.10.1984) மரணத்தின் பின்னரும் நீடித்து அவரது மகன் பிரதமர் ராஜீவ் காந்தியின் காலத்தில் 1989இல் இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தைப் பிரசவித்தது. இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தானதன் பின்னர் அமிர்தலிங்கம் அவர்கள் எழுதி வெளியிட்ட ‘இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தம் வந்த வரலாறு’ எனும் நூல் இதனை விவரிக்கிறது.

அன்னை இந்திராகாந்தி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கம் அவர்களை ஓர் ‘அரசியல் கனவான்’ (POLITICAL STATESMAN) என்றும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை ‘அரசியல் குள்ள நரி’ (POLITICAL FOX) என்றும் வர்ணித்தமை இந்திரா காந்தி அவர்கள் அமிர்தலிங்கம் மீது கொண்டிருந்த அபிமானத்தைக் காட்டுகிறது.

ஆளுமையுள்ள தலைவன் ஒருவனுக்குக் காலமறிந்து செயற்படவேண்டிய கணிப்பீடு அவசியம். அமிர்தலிங்கம் அதனையுமுணர்ந்து செயற்பட்டார்.

1983/84இல் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் பேசுவதற்காக அப்போதைய இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியாவின் தலையீட்டினால் சர்வகட்சி மாநாட்டைக் கொழும்பில் கூட்டினார். அம்மாநாட்டில் தமிழர் தரப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் தலைமையில் இந்தியாவிலிருந்து வந்து பங்குபற்றியது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் குள்ளநரிப் போக்கினால் அம்மாநாடு 1984 டிசம்பரில் தோல்வியில் முடிந்த போது, எதிர்காலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த, இலங்கை அரசாங்கத்துடனான எந்தப் பேச்சுவார்த்தையிலுமே தமிழ் ஆயுதப் போராளி இயக்கங்களும் பங்குபற்றவேண்டுமென்று பகிரங்கமாக அறிவித்தார்.

அமிர்தலிங்கமும் இலங்கை -இந்திய ஒப்பந்தமும்

இதன் பிரதிபலிப்புதான் இந்தியாவின் நல்லெண்ண மத்தியஸ்தத்துடன் பூட்டான் நாட்டுத் தலைநகர் திம்புவில் இலங்கைத்தமிழர் தரப்பிற்கும் இலங்கை அரச பிரதிநிதிகளுக்குமிடையில் 1985இல் நடைபெற்ற பேச்சுவார்த்தையாகும். இப் பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்புக் குழுவில் தமிழர் விடுதலைக் கூட்டணி, எல்ரீரீஈ, ஈபிஆர்எல்எஃவ், புளொட், ஈரோஸ், டெலோ ஆகிய ஆறு அமைப்புகள் கூட்டாக இடம்பெற்றிருந்தன. அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் இவை கூட்டாகப் பங்குபற்றின.

இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தை இலங்கைத் தமிழர்கள் அனுசரித்துப் போக வேண்டுமென்பதிலும் இந்தியாவை எப்போதும் நேச சக்தியாகத் தமிழர்கள் வைத்திருக்க வேண்டுமென்பதிலும் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் அமிர்தலிங்கம் இருந்தாரெனினும், இந்திய -இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரிக்கும் ஏனைய தமிழ் அமைப்புகளுடன் இணைந்து போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கையுடன் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன் வருமாறும் முதலமைச்சர் பதவியையும் ஏற்குமாறும் ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபாவும் அவருடைய கட்சிச் சகாக்களும் அழைத்தபோது அதற்கு அவர் விருப்பம் காட்டினாலும் அதனை நிறைவேற்ற அவரால் முடியவில்லை.

அவர் தற்றுணிவுடன் முடிவுகளை எடுக்கும் வகையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய தலைவர்கள் (மு.சிவசிதம்பரம், இரா.சம்பந்தன், வீ.ஆனந்தசங்கரி போன்றவர்கள்) அவரின் கரத்தை வலுப்படுத்துவதில் உறுதியாகவிருக்கவில்லை. புலிகள் அல்லாத ஏனைய இயக்கங்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி கை கோர்ப்பதற்கு இவர்கள் தயக்கம் காட்டியதே அதற்குக் காரணம். இந்த விடயத்தில் அமிர்தலிங்கத்தின் உறுதிப்பாடும் அரசியல் தெளிவும் சிவசிதம்பரம், இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி போன்ற மூத்த தலைவர்களிடம் இருக்கவில்லை. இதனைக் கடந்து தன்னிச்சையான முடிவெடுப்பதற்கு அமிர்தலிங்கம் அப்போது விரும்பியிருக்கவில்லை.

ஆனாலும், மாகாணசபைத் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு தமிழ் மக்களைப் புலிகள் அச்சுறுத்திய போது அமிர்தலிங்கம் அவர்கள் தன்னளவில் “துப்பாக்கியினால் பூட்டப்பட்ட ஜனநாயகத்தின் கதவுகள் துப்பாக்கியாலேயே திறக்கப்பட வேண்டும்” என்று துணிவுடன் ஊடக அறிக்கையிட்டு ஈபிஆர்எல்எஃப், ஈஎன்டிஎல்எஃப் இணைந்து எதிர்கொண்ட அம்மாகாண சபைத்தேர்தலில் தமிழ் மக்கள் பங்குபற்றி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். சமூகப் பொறுப்பையுணர்ந்த அவரின் செயற்பாடு இது. இதனாலும் புலிகள் அவர் மீது ஆத்திரம் கொண்டு 13.07.1989 அன்று பழி தீர்த்துக் கொண்டார்கள்.

 

எதிரிகளையும் மன்னிக்கும் தலைவர்

எதிரிகளையும் மன்னித்துவிடுகின்ற மனமும் அமிர்தலிங்கத்திடம் இருந்தது. 1961இல் தமிழரசுக் கட்சி வட கிழக்கு மாகாணங்களில் கச்சேரி வாயில்களை மறித்து நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது ஏனைய தலைவர்களுடன் அமிர்தலிங்கத்தையும் அவரின் மனைவி மங்கையர்க்கரசி சகிதம் அப்போது இலங்கையின் பிரதமராக இருந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கம் கைது செய்து பனாகொடை இராணுவ முகாமில் தடுப்புக் காவலில் வைத்தது.

அதேபோல், 1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை (தமிழீழக் கோரிக்கை) அச்சடித்துத் துண்டுப் பிரசுரமாகப் பொது மக்களிடம் விநியோகம் செய்த போதும் அமிர்தலிங்கத்தை ஏனைய சகாக்கள் சிலருடன் அப்போது பிரதமராகவிருந்த திருமதி சிறிமாவோ அரசாங்கம் கைது செய்து தடுத்து வைத்தது. அதையொட்டியே பிரபல்யமான ‘ரயல் அற் பார்’ வழக்கு நடந்தது.

பின்னாளில், 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமை வகித்த அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுச் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை குறிப்பிட்ட காலத்திற்குப் பறிக்கப்பட்டு அப்போது பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அவர் பதவியை இழந்து பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியபோது அமிர்தலிங்கம் தனது ஆசனத்திலிருந்து எழுந்து சென்று அவரின் கையைப் பற்றி ஆதரவுடன் அவரை பாராளுமன்ற வெளி வாசல் வரை கொண்டு சென்று மரியாதையுடன் வழியனுப்பி வைத்தார்.

இதே ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசாங்க காலத்தில் எந்த நாட்டிலும் இடம்பெறாத சம்பவமாக, எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கத்தின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய பாணந்துறைத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நெவில் பெர்னாண்டோ “அமிர்தலிங்கத்தின் இரண்டு கால்களையும் பிடித்து இரண்டாகக் கிழித்துப் ‘பேர’ வாவியில் எறிய வேண்டும்” என்று மிகவும் அநாகரீகமாகப் பேசினார். அதே நெவில் பெர்னாண்டோ பின்னாளில் நோயுற்று மருத்துவமனையில் இருந்தபோது அமிர்தலிங்கம் அவர்களைப் பார்க்கச் சென்று தேறுதல் வார்த்தைகள் கூறி ஆறுதல் படுத்தினார்.

பகைவனுக்கும் அருளும் பக்குவமும் அமிர்தலிங்கத்திடம் இருந்தது.

அமிர்தலிங்கம் புலிகளால் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்வியுற்றதும் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா கூறிய வார்த்தைகள் என்னவெனில் ‘நல்லவேளை. அமிர்தலிங்கத்தைச் சிங்களவர்கள் சுடவில்லையென்பது ஆறுதல் அளிக்கிறது’ என்பதாகும். அதாவது தான் சார்ந்த இனம் இத்தகைய மிலேச்சத்தனமான செயலைச் செய்யாததினால் தன்னினம் ஈனத்திற்குள்ளாகாமல் காப்பாற்றப்பட்டு விட்டதென்ற ஆறுதலாகும்.

இந்த வார்த்தைகள் இப்போதாவது தமிழினத்தின் சிந்தனையைக் கிளறுமா?.

ஆனால், அமிர்தலிங்கம் கொலையுண்ட சம்பவத்தில் உயிர் பிழைத்த அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் பின்னாளில் கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்ற யாழ்.கரவெட்டி விக்னேஸ்வரா வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கூட்டம் ஒன்றில் “தனது இறுதிக் காலத்தைப் பிரபாகரனுக்குத் தொண்டனாகவிருந்து கழிக்கப் போகிறேன்” என்று கூறிய கூற்றும் -2001இல் புலிகளைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்று வெளியிடப்பெற்ற 22.10.2001 திகதியிட்ட ஊடக அறிக்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக (அமிர்தலிங்கம் வகித்த அதே பதவியை வகித்துக்கொண்டு) இரா.சம்பந்தன் கையெழுத்திட்டமையும் -2001இல் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத் தலைமையை வீ.ஆனந்தசங்கரி ஏற்றுக்கொண்டமையும் (பின்னர் தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கெதிராக மாற்றிக்கொண்ட போதிலும்) -அமிர்தலிங்கம் கொலையுண்ட சம்பவம் நடந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்து ‘அ’ விலிருந்து ‘ஃ’ வரை அத்தனையையும் தெரிந்து வைத்திருந்த மாவை சேனாதிராசாவின் அரசியல் நிலைப்பாடுகளும் அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் ஆன்மாவுக்குச் செய்த ‘பச்சைத்’ துரோகங்களாகும்.

அமிர்தலிங்கத்தின் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் இருந்தாலும் அவர் வாழ்ந்த காலத்தில் இலங்கைத் தமிழினத்தின் நம்பகத்தன்மை மிக்க-ஆளுமை நிரம்பிய தலைவனாக அவர் மிளிர்ந்தார்.

1970ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் அமிர்தலிங்கம் அவர்கள் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.தியாகராஜாவிடம் தோல்வியடைந்தார்.

அமிர்தலிங்கம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்காத 1970-1977 காலப்பகுதியில்தான் பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல், ‘தமிழர்களின் மரணசாசனம்’ என வர்ணிக்கப்பட்ட 1972 புதிய குடியரசு அரசியல் அமைப்பு நிறைவேற்றம் -தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயம் – 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் முடிவில் நிகழ்ந்த அப்பாவி மக்கள் ஒன்பது பேரின் மரணத்திற்குக் காரணமாயிருந்த மின்சாரக் கம்பி மீதான பொலீசாரின் துப்பாக்கிப் பிரயோகம் -தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டை மாநாடு -தமிழீழத் தீர்மானம்- ‘ட்ரயல் அட் பார்’ வழக்கு என முக்கியமான சம்பவங்கள் நிகழ்ந்தன. இக்காலம்தான் அமிர்தலிங்கம் கட்சிப் பணிகளிலும் -தமிழ்த் தேசிய அரசியலிலும் கூடிய நேரம் ஒதுக்கித் தீவிரமாகச் செயற்பட்ட காலம். தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்ததில் ‘தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அமிர்தலிங்கத்தின் வகிபாகமும் முக்கியமானது.

அதேவேளை 1977 பாராளுமன்றத் தேர்தலில் காங்கேசன்துறைத் தொகுதியில் வென்று இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவி வகித்த 1977-1983 காலப்பகுதிதான் அவர் அரசியல் ரீதியான அதிகபட்ச விமர்சனங்களைத் தமிழர்களிடமிருந்து குறிப்பாகத் தமிழ் இளைஞர்களிடமிருந்து எதிர்கொண்ட காலம். அதுக்குக் காரணங்களாக 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வாக்குறுதியளித்திருந்தபடி தேர்தலின் பின்னர் ‘தமிழீழத் தேசிய மன்றம்’ அமைத்து தமிழீழத் தனிநாட்டுக்கான அரசியல் அமைப்பை உருவாக்குவதை அலட்சியம் செய்தமை — ஜனாதிபதி ஜே.ஆர்.அரசாங்கத்தினால் எதிர்க் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளையும் வசதிகளையும் ஏற்றுக் கொண்டமை – 1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் ஆதரித்தமை -1982இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் பகிஸ்கரிக்கும்படி தமிழ்மக்களைக் கோரியதன் மூலம் அத்தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெல்வதற்கு மறைமுகமான ஆதரவு வழங்கியமை போன்ற விடயங்கள் காரணமாயிருந்தன.

ஆனாலும், இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பிராயச்சித்தம் தேடும் வகையில், 1983 ஜூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து இந்தியா சென்று 1983-1987 காலப்பகுதியில் அவர் ஆற்றிய இராஜதந்திர அரசியல் செயற்பாடுகள் அவரது ஆளுமையை இன்னொரு படி உயர்த்திற்று எனலாம்.

1987 ஜூலை 29இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அறுவடை செய்ததில் அமிர்தலிங்கம் அவர்களின் வகிபாகம் அளப்பரியது.

# புலிகள் அப்பாவிச் சிங்கள மக்கள் மீது படுகொலைத் தாக்குதல்களை நிகழ்த்தியபோது அமிர்தலிங்கம் மனம் சங்கடப்பட்டார்.

# புலிகள் ஏனைய போராளி இயக்கங்கள் மீது சகோதரப் படுகொலைகளை நிகழ்த்திய போது மனம் வெதும்பினார்.

# மாற்றுச் சிந்தனையாளர்களையும் அரசியல் தலைவர்களையும் புலிகள் போட்டுத்தள்ளிய போது மனதுக்குள்ளேயே புலம்பி அழுதார்.

# இந்திய அமைதிகாக்கும் படையின் மீது புலிகள் போர் தொடுத்தபோது செய்வதறியாது திகைத்தார்.

# ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் புலிகள் வெளிப்படுத்திய ‘பாசிசப்’ (Fascism) போக்கு தமிழினத்தை அழிவுக்கு இட்டுச் செல்லப் போகிறதே என்று அவரின் இதயம் ஏங்கித்தவித்தது.

# புலிகளின் வன்முறைப் போக்கை ஓர் அரசியல் தலைவனாகத் தன்னால் தடுக்க முடியவில்லையே எனத் தவித்தார்.

இவையெல்லாவற்றையும் மீறிப் புலிகள் தங்கள் இராணுவ வல்லாண்மையால் தமிழ் மக்களைத் துப்பாக்கி முனையின் கீழ் மூளைச் சலவை செய்து ‘தமிழ்ப் பாசிசவாதப்’ போதையூட்டித் தமிழ் மக்கள் அனைவரும் தம்மோடு இருப்பதாகத்- தம்மையே ஆதரிப்பதாகச் சூழ்நிலையைத் தகவமைத்தார்கள். அச்சூழ்நிலையே இன்னும் தொடர்கிறது. இச்சூழ்நிலையை ‘மாற்று அரசியல்’ மூலம் மாற்றுவதே அமரர் அமிர்தலிங்கம் அவர்களுக்குத் தமிழினம் அளிக்கும் உண்மையான அஞ்சலியாகும்.

அமிர்தலிங்கம் அவர்களின் கொலை விவகாரத்தில் எம்மத்தியிலுள்ள ‘புத்திமான்கள்’ சிலர் புலிகளை நியாயப்படுத்தி எழுதியும் பேசியுமுள்ளனர். அத்தகைய ‘புத்திமான்’களிடம் ஒரு கேள்வி.

இலங்கை – இந்திய சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் தந்தை செல்வா அவர்கள் உயிருடனும் ஆரோக்கியத்துடனும் இருந்திருந்தால் அவர் நிச்சயம் ‘இந்திய-இலங்கை’ சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார். அப்படியானால் அவரையும் புலிகள் சுட்டுக்கொன்றிருப்பார்களா? அப்படி நடந்திருந்தால் அப்போதும் இப்’புத்திமான்கள்’ புலிகளை நியாயப்படுத்தியிருப்பார்களா?

நிறைவாக, அமரர் அமிர்தலிங்கத்தின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக மட்டக்களப்புக்கு எடுத்து வரப்பட்ட போது, அன்னாரின் பூதவுடல் தாங்கிய பேழையை மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரை தோழர் பத்மநாபா போன்றவர்கள் சகிதம் தோளில் சுமந்து வந்த இப்பத்தி எழுத்தாளர் அன்னாரின் மறைவு குறித்து அப்போது (1989) வடித்த இரங்கற்பாவின் இறுதிப் பகுதியைப் பதிவு செய்வதுடன், அமிர்தலிங்கத்தை நினைவுகூரும் இந்த நினைவேந்தல் பத்தி நிறைவு பெறுகிறது.

“பாராளுமன்றம் தன்னில்

பகைவரும் நடுங்கும் வண்ணம்

கூரான சொற்கள் கொண்டு

கொள்கையைச் சொன்ன அண்ணா!

போர் என்று வந்தால் உன்னில்

புயலும்தான் தோற்றுப் போகும்!

ஆர் செய்த கொடுமை அண்ணா!

அழுகின்றோம்! அழுகின்றோமே!! “

 

— தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

Leave A Reply

Your email address will not be published.