மின் பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசு முடிவு!- பிரதமர் மஹிந்த அறிவிப்பு

“மக்களுக்கு மின்சாரப் பட்டியலில் நிவாரணம் வழங்குவதற்கு அரசு முன்வந்துள்ளது. அதற்கமைய மின்சாரக் கட்டணத்தின் ஒரு பகுதியைப் பொறுப்பேற்க அரசு முடிவு செய்துள்ளது.”

– இவ்வாறு பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

யட்டியன்தொட பிரதேசத்தில் இன்று (16) நடைபெற்ற சந்திப்பொன்றின்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின்சாரபி பட்டியல்களின் தொகை பெப்ரவரி மாதப் பட்டியலின் கட்டணத் தொகையை விட அதிகமாயின் அந்தப் பாவனையாளர்களுக்கு பெப்ரவரி மாதப் பட்டியலின் பெறுமதியை குறித்த மூன்று மாதங்களுக்கு மாற்றீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில், மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் கட்டணங்களை செலுத்தியுள்ள பாவனையாளர்கள் மேலதிகமாக பணம் செலுத்தியிருந்தால் அந்தத் தொகை எதிர்வரும் மின் பட்டியல்களில் ஈடுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிய வரவு – செலவுத் திட்டமொன்று இன்றி சாதாரண அமைச்சரவையொன்றை நடத்திக்கொண்டு, கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி அரசு பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தது. ஆனால், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் அரசு எவ்வித வேலையையும் செய்யவில்லை என சில அரசியல் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தலின்போது மக்கள் உரிய பதில் வழங்குவர்.

2009ஆம் ஆண்டில் போர் நிறைவடைந்த நாள் முதல் மக்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்து வெற்றிகரமாக முன்னோக்கி வந்த பயணம் 2015ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், பின்னோக்கிச் சென்ற நாட்டின் எதிர்காலப் பயணத்தை புதிய அரசொன்றின் ஊடாக வெற்றிகரமாக ஆரம்பிக்கப் போகின்றோம்” – என்றார்.

Comments are closed.