சிங்கள பௌத்தம் என்பது தமிழ், முஸ்லிம்களை படுகொலை செய்துவிட்டு கடலில் எறிவது அல்ல : சுஜீவ சேனசிங்க

“இனவாதத்தின் ஊடாக ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொண்ட ராஜபக்சக்கள் , கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் பொதுத்தேர்தலையும் வெற்றிகொள்ளவே முயற்சித்து வருகின்றார்கள்.”

– ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க குற்றஞ்சாட்டினார்.

“சிங்கள பௌத்தம் என்பது தமிழ், முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்து கடலில் எறிவது அல்ல. மாறாக அவர்களும் தங்களைப் போன்று வாழ்வதற்கான சமமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே. இவ்வாறான குணம் கொண்ட சிறந்த சிங்கள பௌத்த உறுப்பினர்கள் எங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மீண்டும் அச்சம் எழுந்துள்ளது. முதல் கட்டத்தைவிட இரண்டாம் கட்டத்தில் பாதிப்புகள் அதிகரிக்குமோ என்ற பயம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. இந்தக் கொரோனாவால் நாட்டு மக்களுக்கு உயிர் ஆபத்துகள் எதுவும் ஏற்பட்டால் இதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைவருமே பொறுப்புக்கூற வேண்டும். இதேவேளை, கொலைக் குற்றத்தின் கீழ் நாட்டு மக்கள் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் முடியும்.

அரசு இராணுவத்தைக் காண்பித்தே தொடர்ந்தும் தேர்தலை வெற்றிகொள்ள முடியாது என்பதால் கொரோனா நெருக்கடியின் மத்தியிலும் தேர்தலை நடத்தி ராஜபக்சக்கள் என்ற விருட்சத்தை மேலும் வளர்ச்சிப் பெறச்செய்ய முயற்சித்து வருகின்றது. இம்முறை தேர்தலில் ராஜபக்சக்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெருந்தொகையானோர் போட்டியிடுகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், பொருளாதார அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பதவி வகிக்கும் முதல் நாடு இலங்கையே. இந்த நிலைமையை எண்ணி நாம் தலைகுனிய வேண்டும். இது ஒரு அடிமைத்தனமாகும்.

அரச குடும்பங்களின் ஆட்சிகள் இடம்பெறும் நாடுகளில் கூட எல்லாபி பதவிகளையும் அவர்களே வகிப்பதில்லை. இந்த நிலைமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பொறுப்புக்கூற வேண்டும். அவர்தான் ராஜபக்சக்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்குபி பெரும் பங்காற்றியவர்.

ஐ.தே.கவின் உப தலைவர் ரவி கருணாநாயக்க சிறந்த முறையில் செயற்படும் தலைவர்கள் மீது நாங்கள் குற்றம் சுமத்துவதாகக் கூறியுள்ளார். அவரது செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்குத் தெரியும். கோட்டாபய ராஜபக்ச ஆட்சி முறை தோல்வியையே சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை நாட்டுகள் வரவிடாமல் தடுக்க இவர்களால் முடியாமல் போயிருந்தாலும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முறையாக செயற்பட்டனர்.

இவர்களைப் போன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் தலைமையிலான எமது குழுவினருக்கும் செயற்பட முடியும். மூன்று மாதங்களுக்கு நாட்டை முடக்கி வைக்க எடுத்த தீர்மானத்தின் காரணமாகவே மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. சிக்கலை ஏற்படுத்தியுள்ள மின்கட்டணங்களை அரசு செலுத்தும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தாலும், கட்டணப் பட்டியல்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க , சஜித் பிரேமதாஸ ஒவ்வொரு மாதத்துக்கும் 20 ஆயிரம் ரூபாப்படி 12 மாதங்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார் எனக்குகுறிபபிட்டுள்ளார். 12 மாதங்களும் இவ்வாறு வழங்க எங்களுக்குப் புத்தியில்லையா? இரு மாதங்களுக்கே நிவாரணம் பெற்றுக் கொடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாழ்வாதாரம் இன்றி பாதிப்படைந்துள்ள மக்களுக்கே இவ்வாறு 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கின்றார்.

பொருட்களின் விலைக் கட்டுபாட்டை ஏற்படுத்த முடியாத ஜனாதிபதியால் என்ன செய்ய முடியும். அரச நிர்வாகத் துறைகளில் இராணுவத்தை நியமிப்பதால் முறையான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படாது. தற்போது சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுவதையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப் போகின்றனர். இதுவும் இராணுவ ஆட்சிக்கான முயற்சிதான்.

சஹ்ரானுக்குச் சம்பளம் கொடுத்தார்கள். கருத்தடை மருந்துகள், சரியா கற்கை நிலையங்கள் என்றார்கள். தற்போது வைத்தியர் ஷாபிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளார்களா? முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவும் அவர்களுடன்தான் இணைந்துகொண்டுள்ளார். இனவாதத்தைத் தூண்டி ஜனாதிபதித்தேர்தலை வெற்றிகொண்டனர். தற்போது தொடர்ந்து வரும் தீமையான காலநிலையும் அவர்களுக்கே நன்மையாக அமைகின்றது.

மக்களை ஏமாற்றுவது இலகுவானது என்றாலும், தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. போரை வெற்றி பெற்றதாகவே ராஜபக்சக்கள் பெருமை கொள்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நாளும் போரைச் சாப்பிட்டு உயிர்வாழ முடியுமா? சிங்கள பௌத்தம் என்று இனவாதத்தை போசித்து வந்தார்கள். அதே சிங்கள பௌத்தத்தை மதிக்கும் பல உறுப்பினர்கள் எம்முடனும் இருக்கின்றார்கள். சிங்கள பௌத்த குணம் என்பது இந்த நாட்டு மக்கள் அனைவரையும் வாழவைப்பதே தவிர, தமிழ், முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்து கடலில் எறிவது அல்ல. சிங்கள பொளத்த மக்களுக்க முன்னுரிமை கொடுப்பதுடன் ஏனைய, இனத்தவர்களும் சமமான முறையில் வாழுவதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம்” – என்றார்.

Comments are closed.