இனவாதிகள் என சஜித் அணியை விமர்சிக்க , ரணில் அணியினருக்கு வெட்கம் இல்லையா? : கணேஸ்

“சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர்களாக இனவாதிகள் இருக்கின்றார்கள் என்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். பொதுத்தேர்தல் தோல்விப் பயத்தில் அவர்கள் இப்படிப் பொய்யுரைப்பது வெட்கமில்லையா?”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சஜித்தின் கட்சியில் இனவாதிகள் இருக்கின்றார்கள் எனவும், சிறுபான்மை இனத்தவர்கள் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிறுபான்மை இனத் தலைவர்களினாலேயே சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியாதா?

ரவி உள்ளிட்ட ஐ.தே.கவில் தற்போது உள்ளவர்களின் ஊழல், மோசடிகளினாலேயே அக்கட்சி இன்று முகவரி இழந்து நிற்கின்றது. திருடர்கள் எமது கட்சியை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.

இந்தப் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றியடையும். ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடையும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தேர்தலின் பின்னர் பிச்சைதான் எடுக்கும்.

சஜித் தலைமையில் பலமான புதிய அரசு உருவாகும். மூவின மக்களின் பிரச்சினைகளையும் எமது புதிய அரசு தீர்த்துவைக்கும். இது உறுதி” – என்றார்.

Comments are closed.