மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை!

மத்திய வங்கியின் முதலாவது பிணைமுறிகள் மோசடி தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் முதலாவது பிரதிவாதியான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் இரு நாட்டு சட்டமா அதிபர்களுக்கும் இடையில் தொடர்ந்தும் தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன என்று ச ட்டமா அதிபர் இன்று மேல் மாகாண நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாமுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிடின் அர்ஜுன மகேந்திரனின்றி வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு சட்டமா அதிபர் எதிர்பார்த்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான தெரிவித்தார்.

இரு நாடுகளினதும் சட்டமா அதிபர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் சட்டமா அதிபரால் எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் நீதியரசர் குழாத்தின் தலைவராக செயற்படும் சம்பா ஜானகி ராஜரத்ன வினவியமைக்கே இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வழக்கின் பத்தாவது பிரதிவாதியான சிங்கப்பூரில் வசிக்கும் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான அஜான் புஞ்சிஹேவா, தற்சமயம் மலேசியாவுக்குச் சென்றுள்ளதால் அவரின்றி வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரியந்த நாவான நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

2015 பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறிகள் ஏலத்தில், அரசுக்குச் சொந்தமான 68 கோடி 80 இலட்சத்துக்கும் அதிக நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி நம்பிக்கையைச் சீர்குலைத்த குற்றச்சாட்டில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பத்தினிகே சமரசிறி உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சம்பா ஜானதி ராஜரத்ன மற்றும் நாமல் பலல்லே உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் எடுக்கவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்காக வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.