வீட்டில் மின்சார வசதி பெற மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்! – நெகிழ்ச்சி சம்பவம்..

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலிருந்து, ஊரடங்கால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் மாணவர்களும் உள்ளனர். பல மாதங்களாக பள்ளிகள் தொடர்ந்து மூடியே இருக்கும் நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதற்கென்று சில வரையறைகள் உள்ளன. அது மட்டுமின்றி, இணைய இணைப்பு நன்றாக கிடைத்தால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளையும் நடத்த முடியும், மாணவர்கள் கலந்து கொள்ள முடியும். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு சரியான மொபைல் மற்றும் இன்டர்நெட் வசதி என்பதே கடும் போராட்டமாக இருக்கிறது.

கேரள மாநிலத்தில் பல்வேறு மாணவர்களுக்கு இந்த நிலை இருப்பதை அறிந்த ஆசிரியர்கள் பலரும் மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். குறிப்பாக வடகர் அருகேயுள்ள கீழல் எனும் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் கே.ஸ்ரீஜன் என்பவர், தன்னுடைய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள தேவையான வசதிகள் இருக்கிறதா என்று கடந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் சென்று பார்த்து வந்திருக்கிறார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அதிர்ச்சியூட்டும் விதமாக, ஆரம்ப வகுப்புகளில் இருக்கும் பல மாணவர்களின் வீட்டில், மின்சார வசதி கூட இல்லை என்பது தெரியவந்தது. ஒரு மாணவரின் வீடு முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத நிலையில், அந்த வீட்டின் மின்சார வயரிங் இணைப்பு இன்னும் முழுதாக முடிக்கப்படவில்லை.

ஆசிரியராக பயிற்சி பெறுவதற்கு முன்பு வயரிங் கோர்ஸ் முடித்த ஆசிரியர் ஸ்ரீஜன், உடனேயே அந்த மாணவரின் வீட்டில் மின்சார இணைப்பு வழங்க வேண்டியதற்கான ஏற்பாடுகளை செய்தார். உடன் பணிபுரியும் ஆசிரியர்களான, பி.ராமேஷ்வர், பி எஸ் அர்ஜுன், கே பஹத், ஆர். ஜிஜீஷ், மற்றும் எம் ஃபைஸல் ஆகியோருடன் இணைந்து, செயல்பட்டார். இவர்களுடன், பள்ளி நிர்வாகமும், வயரிங் செய்யத் தேவைப்படும் எலக்ட்ரிக் சாதனங்கள் வாங்குவதற்காக உதவியது. ஒரு மாதத்துக்குள், அந்த மாணவரின் வீட்டில் வயரிங் முடிந்து, மின்சார இணைப்பு கிடைத்து விட்டது.

இதுகுறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு ஸ்ரீஜன் அளித்த பேட்டியில், “முழு வயரிங்கும் முடிப்பதற்கு ஒன்றரை நாட்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஆனால், வீடு பாறை போன்ற மேற்பரப்பில் கட்டப்பட்டிருப்பதால், எர்த்திங் பணிகள் முடிய அதிக நாட்கள் ஆகியது. எனவே, நாங்கள் கேரள மாநில மின்சார வாரியத்தின் அதிகாரிகளை அணுகி, உதவி கோரினோம். கூடுதலாக இரண்டு எலக்ட்ரிக்கல் எர்த்திங் வழங்கப்பட்டு, அந்த பிரச்சனையும் தீர்ந்தது’ என்று கூறினார்.

மேலும் வீட்டில் விளக்குகள் எரிந்த உடன், அந்த மாணவரின் முகத்தில் தோன்றிய சிரிப்பு அவ்வளவு அற்புதமாக இருந்தது என்று நெகிழ்ச்சியாக கூறினார். இதுமட்டுமின்றி உள்ளூர் DYFI கமிட்டி, அந்த மாணவனுக்கு ஒரு மொபைல் ஃபோனும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.