ரூ.600 கோடி மெகா மோசடி… சிபிஐ பிடியில் சிக்குவார்களா ஹெலிகாப்டர் பிரதர்ஸ்?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் கணேஷ், சுவாமிநாதன் சகோதர்கள். ஹெலிகாப்டர்கள் சகோதரர்கள் என அழைக்கப்படும் இவர்கள் நிதிநிறுவனம் நடத்தி பல கோடி மோசடி செய்து விட்டதாக புகார்கள் குவிந்தன. 600 கோடி ரூபாய் வரை பலரிடம் மோசடி செய்துள்ளதாக கும்பகோணம் நகரம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் இந்த விவகாரம் அனைவரின் கவனத்திற்கும் சென்றது.

இந்தநிலையில், துபாயில் தொழில் அதிபர்களாக இருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த் ஜபருல்லா-பைரோஜ் பானு தம்பதி, தங்களிடம் 16 கோடி ரூபாய் வரை ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி செய்து விட்டதாக தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பகீர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் இதுவரை 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிதிநிறுவன மேலாளர் ஸ்ரீகாந்தன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சகோதரர்கள் வீட்டிலிருந்து 12 சொகுசுக்கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தம்பதியர், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரிடமும் மனு அளித்துள்ளனர். மேலும் பணமோசடி குறித்து பிரதமர் மோடிக்கு, மின்னஞ்சலில் புகார் அளித்துள்ளதாகவும் தம்பதி கூறினர்.

ஹெலிகாப்டர் சகோதரர்கள் கும்பகோணத்தில் சுருட்டிய பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக குறிப்பிட்ட தம்பதி, தமிழக முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தங்களது பணத்தையும் தங்களைப்போல் கும்பகோணத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் பணத்தையும் மீட்டுத்தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பதி உருக்கமான தகவல்களைத் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளியான தங்களது மகன் பெயரில், கும்பகோணத்தில் இறை இல்லம் கட்டி சேவை செய்ய விரும்பி 16 கோடி ரூபாய் பணத்தை சேர்த்து வைத்திருந்ததாக தம்பதி குறிப்பிட்டனர்.

தங்களிடம் பணம் இருப்பது பற்றி தகவல் தெரிந்து கொண்ட ஹெலிகாப்டர் சகோதரர்கள், தங்கள் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் எனக் கூறியதை நம்பி தாங்கள் வைத்திருந்த 16 கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாகவும், ஆனால் நீண்ட நாட்களாகியும் பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். பணத்தை திருப்பித் தராததால் சென்று கேட்டபோது, தங்கள் அரசியல் பின்புலத்தை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.