அரச சேவைகளை வழமையான ஒழுங்கில் முன்னெடுத்தல்.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசி ஏற்றப்பட வேண்டிய மக்கள் தொகையில் அதிக சதவீதமானவர்களுக்கு, இது வரையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. பெரும்பான்மையான அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமையினால், அரச சேவைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு முன்னுரிமையளிக்க வேண்டியுள்ளது.

எனவே, கொவிட் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களின் கீழ், 2021 ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல், அனைத்து அரச ஊழியர்களையும் வழமைபோன்று கடமைகளுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களினால், அரச சேவைகள், மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதை இலகுபடுத்தும் நோக்குடன், மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை சுழற்சி முறையில் சேவைக்கு அழைத்தல் மற்றும் வீடுகளில் இருந்தவாறு சேவைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றுநிரூபங்களையும் இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.