ஹிஷாலினியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை : திசை திருப்ப முயன்ற உயர் பொலிஸ் அதிகாரி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஹிஷாலியின் சடலம் மீதான இரண்டாவது பிரேத பரிசோதனை, இன்று (31) பேராதனை போதனா வைத்திசாலையில் மூன்று விசேட வைத்தியர் குழுவினால் நடத்தப்படவுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, நுவரெலியா நீதவானின் அனுமதியுடன் ஹிஷாலினியின் சடலம் நேற்று (30) தோண்டி எடுக்கப்பட்ட , சடலம் மீதான இரண்டாம் கட்ட பிரேத பரிசோதனைகள் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள் தொடர்பாகவும், சிறுமி ஏதேனும் வகையில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாகவும் பிரேத பரிசோதனைகளில் ஆராயப்படவுள்ளதாக தெரியவருகிறது.

இறந்த சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக, முதலாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாலும், அது எவ்வளவு காலமாக நடந்துள்ளன என்பது குறித்து முன்னைய பரிசோதனையில் குறிப்பிடப்படவில்லை. எனவே  அது எவ்வளவு காலம் என்பது குறித்தும் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும், ஹிஷாலினி உயிரிழப்பதற்கான சரியான காரணம் என்பன தொடர்பிலும் விசேட வைத்திய குழுவினர் பரிசோதனைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த ஹிஷாலினியின் மரணத்தை மறைப்பதற்காக, சிறுமியின் குடும்பத்தாருக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக கூறப்படும் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் உயர் பொலிஸ் அதிகாரியான  நவாஸ் என்பவரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன.

“அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். இந்த பிரச்சினையை தொடர்ந்து பொலிஸ்வரை கொண்டு செல்ல தேவையில்லை. 50 ஆயிரம் ரூபாவை வாங்கி தருகின்றேன். இந்த பிரச்சினையை இதனுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்” என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நவாஸ், ஹிஷாலினியின் குடும்பத்தாருக்கு அழுத்தங்ளை பிரயோகித்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஹிஷாலினியின் உயிரிழப்பை, தற்கொலை எனும் விதத்தில்,  முடித்துக்கொள்ளும் வகையில், ஹிஷாலினியின் சகோதரன் உள்ளிட்ட ஹிஷாலினியின் குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பொலிஸ் அதிகாரியின் தொலைபேசி அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தினங்களில் சந்தேகநபரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிஷாட் பதியூதீனின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக குறித்த நபர் சிறிது காலம் பணிப் புரிந்து வந்துள்ளதுடன், தொடர்ந்து ரிஷாட்டின் உறவினர்களுடன் இவர் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளார்.

ஹிஷாலினிக்கு தீ காயங்கள் ஏற்பட்ட பின்னர், குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கு, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு விடயங்களை தெரிவித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்பின்னர், குறித்த பொலிஸ் அதிகாரி, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு சென்று வந்துள்ளமையும் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

சாட்சியாளர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தல், இலஞ்சம் வழங்க முயற்சித்தமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்களின் கீழ், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிய வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.