தமிழக பட்ஜெட் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

2021 – 22 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஆகஸ்ட் 4) நடைபெற உள்ளது.

கடந்த ஆட்சியில் பிப்ரவரி மாதம் தேர்தலை முன்னிட்டு, இடைக்கால நிதி நிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள அரசு முழு நிலை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இதற்கு துறைரீதியான ஆய்வுக் கூட்டங்களை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் நடத்தினார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 21ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், ஜூன் 24ஆம் தேதியுடன் சட்டப்பேரவையை, தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, முதல்முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதுதொடர்பாக நாளை காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால், அதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்த நிலையில், அதுபற்றியும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல், புதிய தொழில் திட்டங்களுக்கான அனுமதி, வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.